இந்தியர்களின் ஆதரவு பேரிக்காதான் நசியனால் பக்கம் திரும்பலாம்! கவலையில் ம.இ.கா. தலைவர்கள்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது பெரும் நம்பிக்கையை வைத்திருந்த இந்திய சமூகத்தினர், தற்போது அவர் மீதும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

எதிர்க்கட்சியாக இருந்த போது இந்திய சமூகத்தினருக்கு அளித்திருந்த பல வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. ஒற்றுமை அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியைத் தொடர்ந்து, அதில் அங்கம் வகிக்கும் தேசிய முன்னணி மீதான அவர்களின் ஆதரவு சரிவதாக, மலாக்காவைச் சேர்ந்த அடிமட்ட தலைவர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

அண்மையக் காலமாக இந்தியர்களின் ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக பேரிக்காதான் நசியனால் பக்கம் திரும்பி வருகின்றது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் உள்ள இந்தியர்கள் அக்கூட்டணிக்கு ஆதரவளிக்க தொடங்கியுள்ளனர்.

களத்தில் மக்களுடன் இணைந்து ம.இ.காவினர் எந்தவொரு அடிப்படை பணிகளையும் மேற்கொள்வதில்லை. ஆனால், பேரிக்காதான் நசியனால் கூட்டணியினர் தேர்தலை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், எப்போதும் ஓரிட மக்களுக்கு தீவிரமாக களப்பணிகளை ஆற்றி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால், வருகின்ற தேர்தல்களில் இந்தியர்களின் ஆதரவை ஒற்றுமை அரசாங்கத்தால் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 6 மாநில சட்டமன்ற தேர்தலில், இந்திய சமூகத்தினர் பெருமளவில் பேரிக்காதான் நசியனால் கூட்டணிக்கு ஆதரவளித்திருந்ததாக கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ம.இ.காவின் அடிமட்ட உறுப்பினர் ஒருவர் கூறியதாக, FMT இணைய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையில் ம.இ.காவுக்கு இடமில்லாத நிலையில், மக்கள் தங்களை ஏளனமாக பார்க்கும் சூழல் உள்ளதால், ம.இ.காவின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திலுள்ள தலைவர் ஆதரவளிக்க வேண்டும். நடப்பில் இந்தியர்களின் பெரும்பான்மை ஆதரவை கொண்ட கட்சியாக ம.இ.கா விளங்குகின்றது.

ஆனால், களத்தில் மக்களுடனான களப்பணிகளை தீவிர போக்குடன் மேற்கொள்ளவில்லை என்றால், இந்தியர் சார்ந்த இதர புதிய கட்சிகள், ம.இ.கா-வின் இடத்தை கைப்பற்றுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அந்த தலைவர்கள் எச்சரித்ததாக FMT கூறியிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்