வரலாற்று சிறப்புமிக்க விவேகானந்தா ஆசிரம நிலப்பகுதி மரபுடைமை அந்தஸ்திலிருந்து விடுபட்டது எப்படி ?

பிரிக்பீல்ட்ஸ், மார்ச் 28-

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் 124 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விவேகானந்தா ஆசிரம நிலப்பகுதி ஹெரிடேஜ் எனப்படும் மரபுடைமை அந்தஸ்திலிருந்து விடுப்பட்டு போனது குறித்து சமூக ஆர்வலர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

இந்தியர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க விவேகானந்தா ஆசிரமம் வீற்றிருக்கும் நிலப்பகுதி, 2040 ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகர் மன்ற பெருந்திட்ட வரைப்படத்தில் மரபுடைமை சொத்தாக அங்கீகரிக்கப்படாமல் விடுபட்டு போனதை ஆட்சேபிக்கும் வகையில் இன்று காலையில் ஆசிரம கட்ட வளாகம் திரண்ட சமூக ஆர்வலர்கள் , தங்களின் அட்சேபத்தை பதிவு செய்ததுடன், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்

கடந்த 2014 ஆம் ஆண்டு விவேகனந்தா ஆசிரம நிலப்பகுதி வர்த்தக மேம்பாட்டுத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட போது இந்திய ஆர்வலர்கள் ஒன்று திரண்டு, அத்திட்டத்தை தடுத்து நிறுத்தி, அந்த நிலப்பகுதி காப்பாற்றப்பட்டது.

குறிப்பாக, கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடம் மக்கள் தெரிவித்த ஆட்சேப நடவடிக்கையைத் தொடர்ந்து விவேகானந்தா ஆசிரிமம் வீற்றிருக்கும் பகுதிக்கு வருகை புரிந்த அன்றைய சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் நஜ்ரி அப்துல் அஜிஸ், நிலப்பகுதியை பார்வையிட்டதுடன் இது ஹெரிடேஜ் எனப்படும் மரபுடைமை பகுதியாக பாதுகாப்பதற்கு அரசாங்க பதிவேட்டில் இடம் பெற வகை செய்யப்படும் என்று உத்தரவாதத்தை அளித்ததாக சமூக ஆர்வலர் டத்தோ A. சந்திரகுமணன் தெரிவித்தார்.

விவேகானந்தா ஆசிரம நிலப்பகுதி, பாதுகாக்கப்பட்டுள்ளது என்று மக்கள் கருதி வந்த வேளையில், அடுத்த 16 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் 2040 ஆம் ஆண்டிற்கான கோலாலம்பூர் மாநகர் மன்ற பெருந்திட்ட வரைப்படத்தில் விவேகானந்தா ஆசிரமமும், அதன் சுற்றுவட்டார நிலப்பகுதியும் ஒரு பிரமாண்டபமான வர்த்தக மேம்பாட்டுத் திட்டத்திற்கு அடையாளம் காணப்பட்டு இருப்பது தம்மை மட்டுமல்ல கோலாலம்பூர் வாழ் இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று டத்தோ சந்திரகுமணன் குறிப்பிட்டார்.

வருகின்ற இளைய தலைமுறையினருக்கு இந்தியர்களின் வரலாற்றுச் சின்னமாக போற்றப்பட வேண்டிய இந்த விவேகானந்தா ஆசிரமத்தை மீண்டும் காப்பாற்றும் முயற்சியில் இந்தியர்கள் ஈடுபடவில்லை என்றால் வருகின்ற இளையோர்களுக்கு இந்த வரலாற்றுப்பூர்வமான மரபுடைமை தளம் மறக்கப்பட்ட ஒன்றாகி விடும் என்று இன்று செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சந்திரகுமணன் குறிப்பிட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகர் மன்ற பெருந்திட்ட வரைப்படத்தில் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமமும், அதன் சுற்று வளாக நிலப்பகுதியும் மரபுடைமை பகுதியாக அடையாளம் காணப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு இருந்தது.

ஆனால், 2040 ஆம் ஆண்டக்கான கோலாலம்பூர் மாநகர் பெருந்திட்ட வரைப்படத்தில் வீவேகானந்தா ஆசிரம நிலப்பகுதி, வர்த்தக மேம்பாட்டுத் திட்ட நிலப்பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றால் கோலாலம்பூர் மையப்பகுதியில் இந்தியர்களின் சொத்தாக விளங்குகின்ற முக்கிய நிலப்பகுதியை கூறுப்போட்டு விட்டு விற்பதற்கு திட்டம் ஏதும் இருந்தால் தயவு செய்து அதனை மறந்து விடுமாறு மலேசிய பேரின்பம் இயக்கத்தின் தேசியத் தலைவர் யு. தாமோதரன் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூர் மாநகரில் முன்பு பங்சார் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் ஆகிய பகுதிகள் இந்தியர்கள் குடியேறிய இடங்களாக இருந்தன. இப்போது அந்த அடையாளத்தைக் காட்டுவதற்கு மிஞ்சியிருப்பது இந்த விவேகானந்தா ஆசிரமம் வீற்றிருக்கும் நிலப்பகுதி மட்டமே.

இந்நிலையில் மரபுடைமை அந்தஸ்திலிருந்து விவேகானந்தா ஆசிரமம் நிலப்பகுதி விடுபட்டு போனதற்கு டான்ஸ்ரீ K. அம்பிகைபாகன் தலைமையிலான விவேகானந்தா ஆசிரம நிர்வாகமும், கோலாலம்பூர் மாநகர் மன்றமும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்