எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்?

இந்தியா, மே 09-

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரானது பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடக்க விழா நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுவரையில் நடைபெற்ற 56 லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டும் 12 போட்டிகளில் விளையாடியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் சாம்பியனான நிலையில், 2023 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த 2 சீசன்களிலும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் 7, 8, 9 மற்றும் 10 ஆவது இடங்களில் உள்ள அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு முறையே 3 சதவிகிதம், பஞ்சாப் கிங்ஸ் 3 சதவிகிதம், குஜராத் டைட்டன்ஸ் 2 சதவிகிதம் மற்றும் மும்பை இந்தியன்ஸ் 0 சதவிகிதம். ஆகையால், இந்த 4 அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பிற்கு முன்னேறுமா என்பது சந்தேகம் தான்.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 59 சதவிகிதம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 56 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தற்போது சிஎஸ்கே, எஸ்ஆர்ஹெச், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் 12 புள்ளிகள் பெற்று 3, 4, 5 மற்றும் 6ஆவது இடங்களில் உள்ளன. இந்த அணிகளுக்கு இடையில் தான் தற்போது போட்டி நிலவுகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றுவிடும்.

மேலும் மற்ற 3 இடங்களில் உள்ள அணிகள் 2 தகுதிச் சுற்று மற்றும் ஒரு எலிமினேட்டர் போட்டியில் மோதும். இதில் கடைசியில் வெற்றி பெறும் அணி 2ஆவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இன்று நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்