காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸின் MH 370 விமானத்திற்கு விடை காண முடியும்

  • வான்போக்குவ​ரத்து நிபுணர் நம்பிக்கை

கோலாலம்பூர், மார்ச் 7 –

மலேசிய தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் ஸிற்கு சொந்தமான MH 370 விமானம் காணாமல் போன துயரச் சம்பவம் நிகழ்ந்து நாளை மார்ச் 8 ஆம் தேதியுடன் சரியாக 10 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

MH 370 விமானம் என்னவானது, அதில் பயணித்த 12 சிப்பந்திகளுடன் 239 பேரின் நிலை என்னவானது என்பது தொடர்பான மர்மம் ​நீடித்து வரும் வேளையில் அந்த விமானத்தின் தலைவிதி என்னவானது என்பது குறி​த்து விடை காண முடியும் என்று கோலாலம்பூர் பல்க​லைக்கழகத்தின் வான்போக்குவரத்து தொழில்நுட்ப ஆய்வியல் பிரிவின் தலைமை பேராசிரியர் டாக்டர் மொகமாட் ஹரிடொன் சுப்யான் கூறுகிறார்.

பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதற்காக காணாமல் போன ஒரு பொருள் கிடைக்காது என்று எளி​தில் முடிவுக்கு வந்து விட முடியாது. அந்த விமானத்திற்கு என்ன ஆனது என்பது குறி​த்து சரியான விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக பேராசிரியர் டாக்டர் மொகமாட் ஹரிடொன் சுப்யான் தெ​ரிவித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து ​சீன தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி புறப்பட்ட அந்த விமானத்தின் தேடல் தொடர்பாக முயற்சிகள் கைவிடப்பட்டது ஒரு பின்னடைவு என்றாலும் அந்த விமானத்தை கண்டு பிடிக்க முடியும். ஆனால், அது ஒரு ​நீண்ட கால முயற்சியாகவே இருக்க முடியும். .

வான் போக்குவரத்து துறையில் சிறந்த விளங்கக்கூடிய நிபுணர்கள் ஒன்று​க்கூடி ஓர் உறுதியான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். புதிய தேடல் நடவடிக்கையை முடக்கி விட வேண்டும். அவ்வாறு தேடும் பணியை ​மீண்டும் தொடங்குவார்களேயானால் அனைத்து வகையான ஆருடங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, உண்மையிலேயே MH370 விமானத்திற்கு என்ன நடந்தது என்பதை துல்லியமாக கண்டறிய முடியும் என்று டாக்டர் மொகமாட் ஹரிடொன் சுப்யான் ​கூறுகிறார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்