குஜராத் டைட்டன்ஸை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை, மார்ச் 27-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட சென்னை அணியில், தொடக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 46 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதனைப் பயன்படுத்தி நடுவரிசையில் அதிரடியில் மிரட்டிய ஷிவம் துபே அரைசதம் அடித்து அணியின் ரன் உயர்வுக்கு வழிவகுத்தார்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.சென்னை அணி இமாலய இலக்கு நிர்ணயித்ததால் குஜராத் அணி வீரர்கள் அதிரடியாக ஆடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆனால், சென்னை அணியின் நேர்த்தியான பந்துவீச்சால் குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்த வண்ணம் இருந்தது. தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் மட்டும் சற்று தாக்குப்பிடித்து 37 ரன்கள் சேர்த்தார். இதனால், 20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதன் மூலம் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 23 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 51 ரன்கள் குவித்த ஷிவம் துபே ஆட்டநாயகன் விருதை வென்றார். சென்னை அணி தொடர்ந்து இரு போட்டிகளிலும் வாகை சூடியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை அலங்கரித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்