கோல குபு பாரு இடைத்தேர்தலை இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்கும்படி வற்புறுத்துகின்ற இந்திய தலைவர்கள் – வி.பாப்பாராய்டு சாடினார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 18-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்காக, இந்திய வாக்காளர்களைச் சந்தித்துவரும் இந்திய தலைவர்களை உட்படுத்திய குழு ஒன்று, அத்தேர்தலை புறக்கணிக்கும்படி, வாக்காளர்களை வற்புறுத்துவதாக, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.பாப்பாராய்டு பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்திய வாக்காளர்களை வீடு வீடாக சென்று சந்தித்துவரும் அத்தரப்பினர், அவர்களை எதிர்க்கட்சியினருக்கு நெருக்கமானவர்களாக காட்டிக்கொள்வதோடு, வரக்கூடிய தேர்தலை புறக்கணிக்கும்படி அவர்களை வலியுறுத்துவதாக பாப்பாராய்டு கூறினார்.

அவர்களின் அச்செயல் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டரசு அரசியலைமைப்புக்கு முரணாக அத்தகைய நடவடிக்கையை அவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது என்பது அவரவர் உரிமை. மக்களை வாக்களிக்க கூடாது என்று அத்தரப்பினரால் எப்படி கூற முடியும் என்று பாப்பாராய்டு கேள்வியெழுப்பினார்.

இதனிடையே, அதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டை முன்வைக்காமல், இடைத்தேர்தலை புறக்கணிக்ககூறும் நபர்களின் பெயர்களை பாப்பாராய்டு வெளியிட வேண்டும் என உரிமை கட்சியின் தலைவரும், பினாங்கு முன்னாள் துணைமுதலமைச்சருமான டாக்டர் பி. ராமசாமி கேட்டுக் கொண்டார்.

நடப்பு ஒற்றுமை அரசாங்கம், இந்திய சமூகத்திற்கு நியாயமாக நடந்துக்கொள்ளாததால், வரவிருக்கும் இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹாராப்பானுக்கு வாக்களிக்க வேண்டாமென, அங்குள்ள வாக்காளர்களை தாங்கள் கேட்டுக்கொள்ளவிருப்பதாக பி. ராமசாமி சாடினார்.

பேரிக்காதான் நசியனாலுக்கு உரிமை கட்சியின் வெளிப்படையான ஆதரவை அவர் தெரிவிக்காவிட்டாலும், எதிர்க்கட்சியினர் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் ராமசாமி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்