ஓபராசி லாலாங் நடவடிக்கைக்காக ஒற்றுமை அரசாங்கம் மன்னிப்பு கேட்க கோரிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல் 18-

ஓபராசி லாலாங் சோதனைக்கும் நடப்பு ஒற்றுமை அரசாங்கத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. இருந்த போதிலும், 1987ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த சோதனையால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டவர்களிடம் நடப்பு அரசாங்கம் வெளிப்படையாக மன்னிப்பைக் கேட்க வேண்டுமென மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹிஷாமுதீன் யூனுஸ் வலியுறுத்தினார்.

நாட்டின் அரசியலைப்பு சட்டத்திற்கு மதிப்பளித்திருந்தால், ஓபராசி லாலாங் சோதனை நடத்தப்பட்டிருக்காது என ஹிஷாமுதீன் கூறினார். துன் டாக்டர் மகாதீர் முஹம்மது, பிரதமராக இருந்த காலத்தில் நடத்தப்பட்ட அச்சோதனையில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் என சுமார் 106 பேர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் – ISA-வின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.

தடுத்துவைக்கப்பட்டவர்களில் பலர் அடிக்கப்பட்டதாகவும் உளவியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறியிருந்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு, அச்சோதனைக்கு மகாதீர் பொறுப்பேற்றுக்கொண்டாலும், அது தமது முடிவு அல்ல என்பதால், மன்னிப்பு கேட்க முடியாது என கூறியிருந்தார்.

நேற்று நடைபெற்ற டிஏபி முன்னாள் தலைவர் கர்பால் சிங்கின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பேசிய ஹிஷாமுதீன், ஓபராசி லாலாங் சோதனை குறித்து நினைவு கூர்ந்ததோடு, அந்த சம்பவம் படிப்பினை என்றும் நாட்டில் அது மீண்டும் நிகழக்கூடாது என்றார்.

அம்னோ சட்டவிரோதமான கட்சி என அறிவித்திருந்த நாட்டின் தலைமை நீதிபதி சலே அப்பாஸ்-சை, மகாதீர் பதவியிலிருந்து நீக்கியிருந்தார். அதற்கு கண்டனங்கள் வலுத்த போது, அப்போதைய பேரரசர் சுல்தான் இஸ்கந்தர் இஸ்மாயிலின் உத்தரவை ஏற்றே தாம் அவ்வாறு செயல்பட்டதாக மகாதீர் கூறியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்