ஜெயவர்த்தினியும், அம்பிகாவும் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்

தங்களிடம் பணிபுரிந்த ஓர் இந்தோனேசியப் பெண்ணை அடித்து, துன்புறுத்தி அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமைச் சேர்ந்த ஓர் இந்திய மாதுவும், அவரின் மகளும், உயிரிழந்த அந்த பணிப்பெண்ணின் குடும்பத்திற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பினாங்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பொது இழப்பீடு மற்றும் கடும் பாதிப்புக்கான இழப்பீடு என மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை உயிரிழந்த இந்தோனேசியப் பணிப்பெண் Adelina Lasao குடும்பத்திற்கு வீட்டின் உரிமையாளரான S. அம்பிகாவும், அவரின் மகள் R. ஜெயவர்த்தினியும் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் பொன்னுதுரை தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி அந்த இந்தோனேசியப் பணிப் பெண் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து தாயும், மகளுக்கும் எதிரான வழக்கில் தாயார் அம்பிகா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்த கிரிமினல் வழக்கிற்கு அப்பாற்பட்ட நிலையில் அந்த இந்தோனேசியப் பணிப்பெண்ணின் குடும்பத்தினர், வீட்டின் உரிமையாளரான அம்பிகா மற்றும் அவரின் மகள் ஜெயவர்த்தினிக்கு எதிராக தொடுத்த சிவில் வழக்கில் வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்வழக்கை பணிப்பெண்ணின் தாயார் Yohana Banunaek தொடுத்து இருந்தார். அந்தப் பணிப்பெண் சுயநினைவு திரும்பாமலேயே புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அம்பிகாவும் அவரின் மகள் ஜெயவர்த்தினியும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்