நீதிமன்றத்தில் கணவன் மனைவி மீது குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜாம்,பிப்.9
பினாங்கு பாலத்தில் தங்கள் மோட்டார் சைக்கிளை கடந்து செல்லும் இதர மோட்டார் சைக்கிளோட்டிகளை காலால் எட்டி உதைப்பது, மணலை வீசுவது போன்ற அடவாடித்தனத்தை புரிந்ததாக மாற்றுதிறனாளி தம்பதியர், புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

50 வயது முஹமாட் ஹஃபிஸ் ஒங் அப்துல்லா, அவரின் 37 வயது மனைவி ஒங் செர் யிங் ஆகிய இருவரும் மாஜிஸ்திரேட் நுருல் ரஷிடா முஹமாட் அகிட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கணவனும், மனைவியும் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 5 மணியளவில் பிறையை நோக்கி செல்லும் பினாங்கு பாலத்தின் 2.8 ஆவது கிலோ மீட்டரில் முஹமாட் ஃபைசுல் மாட் சயின் மற்றும் முஹமாட் ஷடிட் சுலாய்மான் ஆகியோர் மீது இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தம்பதியரின் காலாடித்தனம் செயல் தொடர்பான காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து அந்த மாற்றுத் திறனாளிகளின் செயலுக்கு பலர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து இருந்தனர்.

கணவன், மனைவி இருவருமே தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நுருல் ரஷிடா , அத்தம்பதியருக்கு தலா 2,500 வெள்ளி அபராதம் விதித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்