தண்டனை காலம் குறைக்கப்பட்டாலும் நஜீப்பிற்கு மேலும் 3 குற்றவியல் வழக்குகள் உள்ளன

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனை காலம், 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது மூலம் வரும் 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார். ஆனால், நீதிமன்றத்தில் அவர் இன்னமும் 3 குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மன்னிப்பு வாரியக்கூட்டத்தில் நஜீப்பின் தண்டனை காலம் 12 ஆண்டிலிருந்து 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. 21 கோடி வெள்ளி அபராதம் 5 கோடி வெள்ளியாக குறைக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத் தொகையை செலுத்த முடியாமல் போனால், 70 வயதான நஜீப்பின் தண்டனை காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டு, 2029 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்படுவார்.

இந்நிலையில் 70 வயதான நஜீப், தற்போது நீதிமன்றதில் மூன்று குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார்.

1MDB சம்பந்தப்பட்ட 230 கோடி வெள்ளி நிதி மோசடி, 1MDB முதலீடு செய்ததாக கூறப்படும் Internasional Petroleum Investment Company சம்பந்தப்பட்ட 660 கோடி வெள்ளி நம்பிக்கை மோசடி மற்றும் SRC Internasional நிறுவனத்தின் 2 கோடியே 70 லட்சம் வெள்ளி மோசடி ஆகிய மூன்று குற்றவியல் வழக்குகளை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நஜீப் எதிர்நோக்கியுள்ளார்.

இவற்றில் 1MDB சம்பந்தப்பட்ட 230 கோடி வெள்ளி மோசடி வழக்கைத் தவிர இதர இரண்டு வழக்குகள் இன்னும் முழு விசாரணைக்கு வரவில்லை. நீதிமன்ற நிர்வாக அளவிலேயே அவ்வற்றின் விசாரணைகள் உள்ளன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்