தோல்வியுடன் முடித்தது மும்பை… கடைசி இடம் தான் மிஞ்சியது – சோகத்தில் மூழ்கிய வான்கடே!

இந்தியா, மே 18-

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேலும் 10வது இடத்தில் இந்த தொடரை மும்பை முடித்துள்ளது. 

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வரும் சூழலில், 67ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. 

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் ஓவரிலேயே தேவ்தத் படிக்கலின் விக்கெட்டை நுவான் துஷாரா எடுத்தார். லக்னோ அணி பவர்பிளேவில் சற்று சொதப்பியது. 6 ஓவர்களில் 49 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. ஹூடாவும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 

4வது விக்கெட்டுக்கு ராகுலுடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடினார். மறுபுறம் ராகுல் சற்று நிதானமாகவே விளையாடினார். நிக்கோலஸ் பூரன் 29 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என 75 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். கேஎல் ராகுலும் 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 55 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

கடைசி கட்டத்தில் ஆயுஷ் பதோனி – குர்னால் பாண்டியா சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தனர். லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. மும்பை பந்துவீச்சில் நுவான் துஷாரா மற்றும் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து, 215 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. ரோஹித் சர்மா – டிவால்ட் பிரேவிஸ் மும்பை அணிக்கு ஓப்பனர்களாக களமிறங்கினர். பிரேவிஸ் மிகவும் தடுமாறிய நிலையில் ரோஹித் சிறப்பாக விளையாடினார். மேலும் மழை குறுக்கிட்டதால் அரைமணி நேரத்திற்கும் மேல் ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின் ஆட்டம் தொடங்கியது. பிரேவிஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் டக்அவுட்டானார். 

தொடர்ந்து, ரோஹித் சர்மா அரைசதம் அடித்து மிரட்டினார். அவர் 38 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 68 ரன்களை குவித்தார். அடுத்து ஹர்திக் பாண்டியா 16, வதேரா 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். நான்காவது வீரராக வந்த இஷான் கிஷன் 15 பந்துகளில் 1 பவுண்டரி அடித்து 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும், 7வது வீரராக வந்த நமன் திர் அதிரடியாக விளையாடி வான்கடே மைதானத்தில் இருந்த பார்வையாளர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தார். இருப்பினும் அவரின் அதிரடி மும்பைக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கவில்லை. மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களையே எடுத்தது. 

இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது. நமன் திர் 28 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்களை குவித்திருந்தார். ரவி பிஷ்னோய் மற்றும் நவீன் உல் ஹக் லக்னோ பந்துவீச்சில் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக நிக்கோலஸ் பூரன் வென்றார்.இரு அணிகளுக்கும் இதுவே கடைசி போட்டியாகும். மும்பை அணி 14 போட்டிகளில் 4இல் வென்று, 10இல் தோற்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தையே பிடித்தது. அதுவும் கடைசி 3 வருடங்களில் 2வது முறையாக பத்தாவது இடத்தில் மும்பை அணி தனது சீசனை முடித்துள்ளது. இதற்கு முன் 2022இல் 10வது இடத்தை மும்பை பிடித்தது. மேலும் லக்னோ அணி 14 போட்டிகளில் 7இல் வென்று, 7இல் தோற்று 14 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. லக்னோவும் பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்டது. இதன்மூலம், பெங்களூருவில் மே 18ஆம் தேதி நடக்கும் ஆர்சிபி – சிஎஸ்கே போட்டியை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்