ஐபிஎல் ஒளிபரப்பாளர்கள் தனி உரிமையை மீறி விட்டார்கள் – ரோகித் சர்மா வேதனை

இந்தியா, மே 20-

ஐபிஎல் ஒளிபரப்பாளர்கள் தனி உரிமையை மீறியதாக மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா கடுமையாக சாடியுள்ளார்.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி, 10 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. அதோடு முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. இந்த சீசன் தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் கடைசி ஐபிஎல் சீசன்.

அடுத்த சீசன் ரோகித் சர்மா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இதற்கு முக்கிய காரணமாக கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன், ரோகித் சர்மா சேட் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி அது நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா, ஐபிஎல் ஒளிபரப்பாளர்கள் தனி உரிமையை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையானது ஒவ்வொருவரும் ஊடுருவக் கூடியதாக மாறிவிட்டது.

போட்டியின் போதும் சரி அல்லது, போட்டி அல்லாத மாற்ற நாட்களிலும் சரி நாம் நமது நண்பர்கள் மற்றும் சக வீரர்கள் அல்லது உரிமையாளர்களுடன் பேசும் போது ஒவ்வொரு அடியையும், உரையாடலையும் கேமராக்கள் இப்போது பதிவு செய்கின்றன.

எனது உரையாடலை பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ஸிடம் கேட்டுக் கொண்ட போதிலும் அது ஒளிபரப்பு செய்துவிட்டது. இது தனி உரிமையை மீறுவதாகும். எக்ஸ்க்ளூசிவ் மற்றும் அதிக பார்வையாளர்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவது என்பது இன்று அல்ல என்றாவது ஒருநாள் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் இடையிலுள்ள நம்பிக்கையை உடைக்கும் என்று கூறிய ரோகித் சர்மா நல்ல உணர்வு மேலோங்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியைத் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டிக்கு முன்னதாக ரோகித் சர்மா, தவால் குல்கர்னியை சந்தித்து பேசினார். அப்போது அவரை சூழந்து கொண்ட கேமராமேன்கள், வீடியோ எடுத்தனர். அவர்களிடம் தயவு செய்து ஆடியோவை ஆஃப் செய்யுங்கள். ஏற்கனவே ஒரு வீடியோ வெளியாகி என்னை கவலை அடையச் செய்துள்ளது என்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்