நாட்டுக்கோட்டை செட்டியார்களுடன் இந்து அறவாரியம் ஒப்புதல்

வரும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் பினாங்கு தைப்பூச விழாவை, நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் நிர்வாகத்துடன் ஒருமித்த கருத்திணக்கத்துடன், ஒற்றுமையாக கொண்டாடுவதற்கு உறுதி பூண்டுள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரியம், தைப்பூசத்தையொட்டிய தங்க இரதம் மற்றும் வெள்ளி இரதம் ஊர்வலங்களின் புறப்பாடுகளை, ஒரு மணி நேர வித்தியாசத்தில் நடத்துவதற்கு இணக்கம் கண்டுள்ளது.

இன்று சனிக்கிழமை காலையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என் ராயர், துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன் தலைமையில் வாரியத்தின் ஆணையர்கள், பினாங்கு தைப்பூச கொண்டாட்ட கோயில்கள் நிர்வாகத்துடன் நடத்திய சந்திப்பின் போது ரத ஊர்வலங்கள் செல்லும் வழிகள் மற்றும் நேரம் குறித்து சுமூகமான முறையில் இணக்கம் கண்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் தைப்பூச முதல் நாளான ஜனவரி 24 ஆம் தேதி அறப்பணி வாரியத்தின் தங்க இரதம், பினாங்கு, Queen Street- டில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலிருந்து தண்ணீர் மலையை நோக்கி , காலை 5.30 மணிக்கு புறப்படும் அதேவேளையில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் நிர்வாகத்தின் வெள்ளி இரதம் Penang Street- ட்டில் உள்ள கோயில் வீட்டிலிருந்து தண்ணீர்மலையை நோக்கி காலை 6.30 மணிக்கு புறப்படும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸென் ராயர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தங்க இரதம், வெள்ளி இரதம் ஆகியவற்றின் ஊர்வலங்கள் , வழக்கமான பாதைகளை பயன்படுத்தி, தண்ணீர்மலையை அடைவதற்கு முன்னதாக பிற்பகல் ஒரு மணியளவில் பினாங்கு, டத்தோ கெராமாட்டில் உள்ள சிவன் கோயிலை வந்தடைவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளன.

அதேவேளையில் இரு இரதங்களும் அன்றிரவு 11 மணியளவில் தண்ணீர்மலை, அருள்மிகு பாலதெண்டாயுதபாணி கோயிலை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மணி நேர வித்தியாசத்தில் புறப்படும் இரு இரதங்களும் எந்த நேரத்தில் எந்த இடத்தில் கடந்து செல்லும் என்பது குறித்து துல்லியமான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு பினாங்கு தைப்பூச விழா ஒற்றுமையாகவும், மிகச்சிறப்பாகவும் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு எல்லா நிலைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய தரப்பினருக்கு குறிப்பாக நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் நிர்வாகத்திற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்