பத்து லட்சம் வெள்ளிக்கு மேல் இழப்பீட்டை பெற்றனர்

வாக்குறுதி அளித்ததைப் போல தங்களுக்கு வேலை எதுவும் கொடுக்கப்படாமல், சம்பளமும் வழங்கப்படாமல் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்து இருந்த 733 வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு மொத்தம் 10 லட்சத்து 35 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக வழங்கும்படி சம்பந்தப்பட்ட முதலாளிக்கு ஜோகூர் ஆள்பல இலாகா உத்தரவிட்டுள்ளது.

தங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர் பல மாதங்களாக வேலையின்றி இருந்ததாக கூறப்படும் 733 வங்காளதேசத் தொழிலாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெடுஞ்சாலையில் கால்நடையாக போலீஸ் நிலையத்திற்கு வருகை தந்து புகார் அளித்திருந்தனர்.

அவர்களின் கோரிக்கை தொடர்பான வழக்கு விசாரணை ஜோகூர் ஆள்பல இலாகாவில் நடைபெற்ற போது மேற்கண்ட இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜோகூர், பெங்ஙெராங் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட வங்காளதேசத் தொழிலாளர்களுக்கும், முதலாளிக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்