பவுலிங் செய்து பயிற்சி எடுத்த தோனி – ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பவுலிங் செய்வாரா?

இந்தியா, மே 17-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான எம்.எஸ்.தோனி வலை பயிற்சியில் பவுலிங் செய்து பயிற்சி எடுத்த வீடியோவை சிஎஸ்கே தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரையில் 66 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் இன்னும் 4 போட்டிகளில் லீக் தொடர் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்று தொடங்க இருக்கிறது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளன.

நேற்று நடைபெற இருந்த சன்ரைசர்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான 66ஆவது லீக் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

இதையடுத்து 4ஆவது இடத்திற்கான ரேஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் போட்டி போடுகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான 68ஆவது லீக் போட்டி நாளை பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும், சிஎஸ்கே வெற்றி பெற்றாலும் 4ஆவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

அப்படியில்லை என்றால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இந்த சீசனில் எம்.எஸ்.தோனி 13 போட்டிகளில் விளையாடி 136 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், அவர் 18, 19 ஓவர்களில் களமிறங்கி விளையாடி வருகிறார். அதோடு அவருக்கு முழங்கால் பகுதியில் தசைநார் கிழிவு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

அதற்கு தேவையான மருந்துகளும் எடுத்துக் கொண்டு வருகிறார் என்று ஏற்கனவே செய்தி வெளியானது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் பெங்களூரு வந்த சிஎஸ்கே வீரர்கள் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அதில், சிஎஸ்கே விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொள்ளாமல் பவுலிங் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை சிஎஸ்கே தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மிகவும் முக்கியமான போட்டியான 68ஆவது லீக் போட்டியில் தோனி பந்து வீசினால் ரசிகர்களுக்கு அது இன்னும் உற்சாகத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்