பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கல்வி நிதி

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் 2024 ஆம் ஆண்டுகான கல்வி நிதி உதவித் திட்டத்திற்கு பினாங்கு வாழ் இந்து மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி நிதி உதவித் திட்டத்திற்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இம்மாதத்திலிருந்து பெறப்பட்டு வருவதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கல்விப்பிரிவுத் தலைவர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் வாயிலாக கடந்த ஆண்டு 318 இந்து மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்கு மொத்தம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 250 வெள்ளி நிதி உதவி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவருமான டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகத்திற்கு முந்திய கல்வித் திட்டமான சான்றிதழ் அடிப்படையிலான கல்வி, டிப்ளோமா அல்லது உள்ளூர் உயர்கல்விக்கூடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு போன்ற உயர்கல்வி மேற்கொள்வதற்கு நிதி உதவித் தேவைப்படக் கூடிய மாணவர்களுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இக்கல்வி நிதி உதவியை வழங்கி வருவதாக டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

2024 கல்வி நிதி உதவித் திட்டத்திற்கு இது வரையில் 17 விண்ணப்பங்களை அறவாரியம் பெற்றுள்ளது. இதில் 3 மாணவர்கள் சான்றிதழ் கல்வி, 7 மாணவர்கள் டிப்ளோமா, இதர 7 மாணவர்கள் இளங்கலை பட்டப்பிடிப்பை மேற்கொள்கின்றனர்.

இந்த 17 மாணவர்களுக்கும் மொத்தம் 14,100 வெள்ளி நிதி உதவி வழங்கும் நிகழ்வு, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற போது டாக்டர் லிங்கேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

டாக்டர் லிங்கேஸ்வரனுடன் இணைந்து அறவாரியத்தின் கெளர செயலாளர் டாக்டர் விஷாந்தினி, வாரியத்தின் இதர ஆணையர்களான குமரன் கிருஷ்ணன், டினேஷ் வர்மன் ஆகியோர் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு காசோலைகளை எடுத்து வழங்கினர்.

பினாங்கில் உள்ள அனைத்து இந்து மாணவர்களுக்கும் திறக்கப்பட்டுள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கல்வி நிதிக்கு விண்ணப்பிக்கின்ற மாணவர்கள், பினாங்கில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் பினாங்கில் பதிவு பெற்ற வாக்காளர்களாக இருக்க வேண்டும்.

தகுதி பெற்ற மாணவர்கள் கீழ் கண்ட முகவரியில் விண்ணப்பப் பாரங்களை பெற்றுக்கொள்ளலாம் அல்லது மின் அஞ்சலில் பதிவிறக்கம் செய்யலாம் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்