பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தார்

சென்னை, மார்ச் 30-

சென்னை திருவான்மியூரில் வசித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜிக்கு (48) இன்று (மார்ச் 29) நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்ததில் மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

டேனியல் பாலாஜியின் உடல் தற்போது திருவான்மியூர் இல்லத்தில் உள்ளது. அங்கிருந்து புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர், டேனியல் பாலாஜி. குறிப்பாக, வடசென்னை திரைப்படத்தில் இவர் நடித்த ‘தம்பி’ கதாபாத்திரம் அனைத்து தரப்பாலும் பாராட்டப்பட்டது. அதில்,”லைப்ப தொலைச்சிட்டியேடா” என்ற வசனம் ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெற்றது. 

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2001ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி, அலைகள் ஆகிய தொடரில் முதலில் நடித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், காதல் கொண்டேன் திரைப்படத்தில் காவல் ஆய்வாளராக நடித்து சற்று கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து காக்க காக்க திரைப்படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்து நன்கு பரிட்சயமானார். ஆனால், வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக உயர்ந்தார். பொல்லாதவன், வை ராஜா வை, வடசென்னை ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிய பெரிய வரவேற்பை பெற்றன. இயக்குனர் கவுதம் மேனனின் தாயார்தான் டேனியல் பாலாஜியை திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சொன்னதாகவும் அதை தொடர்ந்தே தனக்கு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் வாய்ப்பு வழங்கியதாகவும் டேனியல் பாலாஜி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி பகுதியில் டேனியல் பாலாஜி, ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். அவர் அம்மாவின் ஆசைக்காக டேனியல் பாலாஜி இந்த கோயில் கட்டினார். KGF பட புகழ் கன்னட நடிகர் யஷ் அந்த கோவில் கட்ட நிதி உதவி வழங்கியுள்ளார் எனவும் ஒரு நேர்காணலில் டேனியல் பாலாஜி கூறியிருந்தார். மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளியின் சகோதரர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்