மதுபோதையில் இரு ஆசிரியர்களுக்கு மரணம் விளைவித்ததாக வாகனமோட்டி மீது குற்றச்சாட்டு

கடந்த டிசம்பர் மாதம், பினாங்கு கெப்பாளா பாத்தாஸில் இரு ஆசிரியர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மதுபோதையில் வாகனமோட்டியதாக பொறியியலாளர் ஒருவர், பட்டர்வொர்த், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

47 வயது தியோ ஜூ லியோங் என்ற அந்த பொறியியலாளர், மாஜிஸ்திரேட் சித்தி ஸுலைக்கா நோர்டின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. தாம் செலுத்திய பி எம் டபள்யூ காரை கொண்டு, 31 வயது முகம்மட் ஃபக்ருல் ரோட்ஸி ஃபவுஸி மற்றும் 32 வயது முகம்மட் ஆஹ்சான் முகம்மட் ஆயூப் ஆகிய இரு ஆசிரியர்கள் பயணம் செய்த காரை மோதித் தள்ளி, அவ்விருவருக்கும் மரணம் விளைவித்ததாக அந்த பொறியியலாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த பொறியிலாளர் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் செபெராங் பிறாய் உத்தாரா மாவட்டத்திற்கு உட்பட்ட ஜாலான் பெர்மாத்தாங் பாரு என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 15 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 50 ஆயிரம் வெள்ளி முதல் ஒரு லட்சம் வெள்ளி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் அந்த பொறியிலாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்