மலேசிய இந்தியர்களுடன் இரண்டறக் கலந்த ரஜுலா

1900களில் மெட்ராஸ் – சிங்கை இருவழி தொடர்பு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. இரு தேசங்களில் வாழும் உறவுகளை அஞ்சல் வாயிலாக இணைக்க பாம்பேயில் இருந்து நாகப்பட்டிணம் எக்ஸ்பிரஸ் வழியாக வரும் கடிதங்களைப் பினாங்கிற்கும் சிங்கப்பூருக்கும் இரு வாரங்களுக்கு ஒரு முறை கப்பல் வழி அனுப்பப்பட்டு வந்தது.

இந்தத் தொடர்புச் சேவையின் முக்கியத்துவத்தை அறிந்தும் நடப்பில் இருக்கும் கப்பல் பழையதாகி விடவே, அதற்கு மாற்றாக அதிக ஆற்றல் மிகுந்த 2 கப்பல்களை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தார்கள். அவைதான் ரோனா மற்றும் ரஜுலா !

முந்தைய டி- கிளாஸ் வகை கப்பலைக் காட்டிலும் இவ்விரு புதிய கப்பல்கள் மிகப் பெரியவை ஆகும். பல கூடுதல் வசதிகளும் இந்தக் கப்பலில் இருந்தன. பொருள்கள் கொண்டு செல்வது மட்டுமின்றி, மக்களும் அதில் பயணித்தார்கள். குறிப்பாக, மலாயா – இந்தியா பயணத்திற்கு ரஜுலா முதன்மை நாயகனாக விளங்கியது.

இதற்கு முன் புகழ் வாய்ந்திருந்த குனார்ட் அட்லாண்டிக் குயின்ஸ் போன்ற கப்பல்களைப் பின் தள்ளி, பிரிட்டிஷ் கொடியைத் தாங்கி வங்கக் கடலில் பெருமையாகப் பயணித்தது ரஜுலா கப்பல்.

நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தார்கள். காலப்போக்கில் அந்த எண்ணிக்கையும் குறைந்தது.

1930களில் அறிமுகப்படுத்தப்பட்ட சிம்லா விதிமுறைகளால்தான் அந்த எண்ணிக்கை குறைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மலாயாவில் இருந்து மெட்ராசுக்கும், மெட்ராசில் இருந்து மலாயாவுக்குமான பயணச் சேவையை வழங்கும் அந்தக் கப்பலை நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. சொகுசு வசதிகள் ஏதும் அந்தக் கப்பலில் இல்லை என்றாலும்கூட, தங்கள் உறவுகளைக் காண குறித்த இடத்திற்குச் சென்றால் மட்டும் போதும் எனும் மனநிலையிலேயே அன்றைய இந்தியர்கள் இருந்தார்கள் எனலாம்.

கொப்பூழ் கொடி உறவைத் தொடர்ந்து நிலைத்திருக்க செய்ததோடு பல குழந்தைகளுக்குத் தாய்மடியாகவும் திகழ்ந்தது ரஜுலா கப்பல். பல கர்ப்பிணிகளின் பிரசவங்கள் கூட இந்த ரஜுலா கப்பலில் நடந்திருக்கிறதே.

அதன் காரணமாகவோ என்னவோ, காப்பாரைச் சேர்ந்த இந்தியப் பெண்மணிக்கு ரஜுலா எனப் பெயரையே சூட்டி இருக்கிறார்கள். ஒரு கப்பலின் பெயரைத் தம் பிள்ளைக்குச் சூட்ட வேண்டும் எனும் எண்ணம் தோன்றும் அளவுக்கு மலேசிய இந்தியர்களின் வாழ்க்கையில் பிண்ணிப் பிணைந்திருக்கிறது ரஜுலா.

1973ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள் ரஜுலா கப்பலின் உரிமை பி & ஓ எஸ். என். சோ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர், அதே ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி ‘தெ ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப்’ இந்தியா நிறுவனத்திற்கு விற்கப்பட்டு ரஜுலா எனும் பெயர் ரங்காட்-ஆக மாற்றப்பட்டது.
மேலும் 6 மாதங்கள் அந்தமான் – நிக்கோபார் தீவுகளுக்குப் பயணித்த பின்னர் 1974ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் நாள் தமது சேவையை ரங்காட் எனும் ரஜுலா நிரந்தரமாய் நிறுத்திக் கொண்டது.

இப்படி கடல் கடந்த தமது உறவுகளை இணைக்கும் தூதுவனாக, அஞ்சல்காரனாக, வங்கக் கடலின் செல்லப் பிள்ளையாக இருந்த ரஜுலா என்றுமே மலேசிய இந்தியர்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கடல் நாயகன் என்று சொன்னால் அது மிகையாகாது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்