செம்பருத்தியே உனக்காக இந்தப் போராட்டமா?

மலேசியாவின் தேசிய மலரான செம்பருத்திப்பூ, தேசிய மலராகத் தேர்வு செய்யப்படக்கூடாது என்று எழுந்த போராட்டங்கள் மத்தியில் அதனைத் தேசிய மலராக அங்கீகரிப்பதில் உறுதியாக இருந்தவர் தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான். விரைவில் வாடிவிடக்கூடிய, நறுமணமற்ற ஒரு பூவையா? தேசிய மலராகத் தேர்வு செய்வது என்று பத்திரிக்கைகள் தலையங்கம் தீட்டின. கிழக்குக்கரை மாநில மக்கள் ரோஜா மலரையே நாட்டின் தேசிய மலராகத் தேர்வு செய்தனர். மேற்குக்கரை மக்கள் மல்லிகையையே தங்களின் நேசத்திற்குரிய மலராகத் தேர்வு செய்தனர். பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் தேர்வு செய்ததோ ‘பூங்கா ராயா’ எனப்படும் செம்பருத்திப் பூ ஆகும்.

 1957ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டின் அடையாளங்களைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின. தேசிய சின்னம், தேசிய மிருகம், தேசிய மலர் என  ஒரு நாட்டின் அடையாளத்திற்குரிய  சில தேசிய சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த வகையில் நாட்டின் தேசிய விலங்கினமாகவும், முத்திரையாகவும் புலியைத் தேர்வு செய்த பினனர் தேசிய மலரைத் தேர்வு செய்யும் படலம் தொடங்கியது.


தேசிய மலரைத் தேர்வு செய்யும் விவகாரத்தைச் சுல்தான்கள் ஆட்சி செய்யும் ஒன்பது மாநிலங்களின் மக்களிடமே விட்டு விடுவதற்கு நாட்டின் முதலாவது பிரதமரான துங்கு முடிவெடுத்தார். அதன்படி மக்களின் வாக்களிப்பின் மூலமாகத் தேசிய மலரைத் தேர்வு செய்வது என முடிவாகியது. தேசிய மலரைத் தேர்வு செய்வதற்கான பொறுப்பைப் பிரதமர் துறை வாயிலாக விவசாயத் துறை அமைச்சு ஏற்றது.


ஒன்பது மாநில  மக்களும் தங்கள் பரிந்துரைகளை முன்வைக்கலாம் என்று விவசாயத் துறை  அமைச்சு 1958ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேசிய மலரைத் தேர்வு செய்வதற்கு விவசாய அமைச்சு 7 மலர்களைப் பரிந்துரை செய்திருந்தது. கனகாம்பரம், செம்பருத்தி, மல்லிகை, தாமரை, ரோஜா, செம்பகம், மகிழம்பூ ஆகியவையே அந்த  ஏழு மலர்களாகும். 


சுதந்திர மலாயாவின்  தேசிய மலர் தேர்வில் நாட்டு மக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும் என்பதற்காக நாட்டின் முதலாவது விவசாயத் துறை அமைச்சரான அப்துல் அஸிஸ் இஷாக் தலைமையில் நாடு முழுவதும் ஒரு மாத காலத்திற்கு விளக்கமளிப்புக் கூட்டமும் நடைபெற்றது. விவசாயத் துறை அமைச்சில் தோட்டக்கலைப் பிரிவிற்குப் பொறுப்பேற்று இருந்த அதிகாரிகள், கிராமங்கள் தோறும் சென்று இதற்கான விளக்கமளிப்பை நடத்தினர். இதற்கான வாக்கெடுப்பும் ஒன்பது மாநிலங்களில் நடத்தப்பட்டன.


எனினும், ரோஜா மலரே  தேசிய மலராகத் தேர்வு செய்யப்பட வேண்டுமென்று  அதிகமானோர் வாக்களித்து இருந்தனர். ரோஜா மலருக்கு  7,696 வாக்குகளும், மல்லிகைக்கு  5,466 வாக்குகளும், மகிழம்பூவிற்கு 3,782 வாக்குகளும், தாமரைக்கு 644 வாக்குகளும் கிடைத்தன. இவ்வாறு கிடைக்கப்பெற்ற வாக்குகள் குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டதில் கிழக்குக்கரை மக்கள் ரோஜா மலரைத் தேர்வு செய்து இருந்தனர். மேற்குக்கரை மக்கள் மல்லிகையைத் தங்களின் விருப்பத்திற்குரிய மலராகத் தேர்வு செய்தனர்.


தேசிய மலரைத் தேர்வு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டாததைத் தொடர்ந்து தேசிய மலரைத் தேர்வு செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. அரசாங்கமே அதற்கான பொறுப்பை ஏற்றது. சுமார் 2 ஆண்டுகள் விவாதத்திற்குப் பின்னர் தேசிய மலரைத் தேர்வு செய்வதில் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானே முக்கிய பங்களிப்பை வழங்கினார். 


எதையும் சமயோசிதமாகச்  சிந்திப்பதிலும், தூர நோக்குப் பார்வையும் கொண்டவரான துங்கு, நாட்டின் தேசிய மலராகப் பூங்கா ராயா எனப்படும் செம்பருத்திப் பூ சிறந்த தேர்வாகும் என்று பரிந்துரை செய்தார். செடி இனத்தைச் சேர்ந்த செம்பருத்தி, கிழக்காசிய மலராகும். அழகு தாவரமான செம்பருத்திச் செடியின் பயன்பாடு அதிகமாகும்.  எளிதில் நடக்கூடியது மட்டுமல்ல, நாடு முழுவதும் வளரக்கூடியதாகும். அத்தாவரத்தின் வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே பயன்பாட்டிற்குரியதாகும். நிறைய விஷயங்கள் அந்த மலரின் மூலம்  அறிந்து கொள்ள முடியும் என்று துங்கு ஒரு பீடிகையுடன் செம்பருத்தி மலரைப் பரிந்துரை செய்தார். 

ஆனால், துங்குவின் இந்தப் பரிந்துரைக்குச் சில தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு வலுத்தது. பத்திரிக்கைகளும், செம்பருத்திப்பூ தேர்வு தொடர்பில் எதிர்மறையான தலையங்கங்களைத் தீட்டின. விரைவில் வாடிவிடக்கூடிய ஒரு நறுமணம் இல்லாத மலரையா? தேசிய மலராகத் தேர்வு செய்வது என்று பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தேசிய மலராகச் செம்பருத்திப்பூவைத் தேர்வு செய்வது எந்த வகையிலும் பொருத்தம் இல்லாதது என்றும் அந்த மலரைத் தேசிய மலராகக் கொண்டாட முடியாது என்று சிங்கப்பூர், மலாய்ப் பாரம்பரிய, மரபுரிமை தலைவர் ஹருன் முகமட் அமின் முழு வீச்சில் எதிர்ப்பு தெரிவித்தார். செம்பருத்திப்பூவையே தேசிய மலராகக் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த துங்கு அவர்கள், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் 1960ஆம் ஆண்டு ஜுலை 28ஆம் தேதி ‘பூங்கா ராயா’ எனப்படும் செம்பருத்திப்பூவைத் தேசிய மலராகப் பிரகடனம் செய்தார்.

செம்பருத்திப்பூவிற்குப் பதிலாக ஆர்க்கிட் மலரைத் தேசிய மலராகப் பிரகடனம் செய்ய வேண்டுமென்று கோரி, திரெங்கானு, டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர் 1961ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. அதற்கு துங்கு அளித்த விளக்கம், செம்பருத்திப்பூவின் சிவப்பு நிறம், நாட்டின் வீரத்தைக் குறிக்கக்கூடியது. ஒரு தனித்துவமான மலராகக் கருதப்படும் செம்பருத்தியின் 5 இதழ்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், பூர்வக்குடியினர், இதர இனத்தவர்களின் ஒற்றுமையைக் குறிப்பதாகும் என்று விளக்கம் தந்தார். செம்பருத்திப்பூவின் ஐந்து இதழ்களை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் ஒற்றுமையையும், தேசப்பற்றையும் வலியுறுத்தும் ருக்குன் நெகாராவில் 5 கோட்பாடுகள் வடிமைக்கப்பட்டன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்