மலேசிய இந்திய சமூகத்தின் 166 ஆண்டு காலப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுக் காண 10 அம்ச திட்டங்கள்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் கவனத்திற்கு கொண்டு செல்ல
அமைச்சர் கோபிந்த் சிங்கிடம் 60 பக்க கோரிக்கை மனு சமர்ப்பிப்பு

மலேசிய இந்தியர்களின் 166 ஆண்டு கால பொருளாதார, சமூகவியல் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும், தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்திடம் 10 அம்ச திட்டங்களை உள்ளடக்கிய 60 பக்க கோரிக்கை மனு ஒன்று, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவிடம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

30 இயக்கங்களின் பின்னணியில் சமூகவியல், பொருளாதார நிபுணத்துவ ஆய்வியல் குழாமினால் ஆறு மாத கால அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்திய சமூகம் நலன் சார்ந்த இந்த பத்து அம்ச கோரிக்கை மனுவை, மலேசியத் தமிழர் தன்மான பேரியக்கத்தின் ஏற்பாட்டில் சமூகப் போராளியும், பிரபல பத்திரிகையாளருமான முனைவர் பெரு. அ.தமிழ்மணி தலைமையில் சிறப்புக்குழு ஒன்று, அமைச்சர் கோபிந்த் சிங்கிடம் வழங்கியது.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் புத்ரா ஜெயாவில் உள்ள இலக்கவியல் அமைச்சில் அதன் அமைச்சர் கோபிந்த் சிங்குடன் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில் இந்திய சமூகத்தின் நிரந்தர விடிவிற்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த கோரிக்கை மனுவை முனைவர் பெரு. அ. தமிழ்மணியுடன் இணைந்து பொருளாதார ஆலோசகர் இரா. மாசிலமணி, தினரகன் இராஜகோபால் மற்றும் சி.மு. விந்தைக்குமரன் ஆகியோர் வழங்கினர்.

இந்தியர்களின் அடிப்படை சொத்துடைமையை உயர்த்துவது, பொருளாதாரம், சமூகவியில், கல்வி, வேலை வாய்ப்பு உட்பட பத்து அம்சங்களை உள்ளடக்கிய, முற்றிலும் மாறுப்பட்ட இதுவரை யாரும் வழங்கிடாத 60 பக்க பரிந்துரைகளை அமல்படுத்துவது மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய சமூகத்தின் அடிப்படை பிரச்னைகளுக்கு ஒட்டுமொத்தமாக தீர்வு காண்பதற்குரிய ஒரு வடிகாலாக இந்த கோரிக்கை மனு அமையும் என்று சம்பந்தப்பட்ட குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த பரிந்துரை தொடர்பாக ஏற்கனவே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி ஓர் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்ற போதிலும் அந்த அறிக்கையின் உள்ளார்ந்த அம்சங்களை விளக்கும் வகையில் அமைச்சர் கோபிந்த் சிங்குடன் இன்றைய சந்ததிப்பு நடைபெற்றுள்ளது.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஒற்றுமை அரசாங்கத்திற்கு தலைமையேற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்ற போதிலும் இந்திய சமூகத்தின் மத்தியில் இதற்கு முன்பு நிலவிய அதே அதிருப்திதான், அன்வார் தலைமையேற்றப் பின்னரும் கடுமையாக வருவதையும், அமைச்சர் கோபிந்த் சிங்கின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக முனைவர் பெரு.அ. தமிழ் மணி தெரிவித்தார்.

சுமார் ஒன்றரை மணி நேர விளக்கத்திற்கு பின்னர் மலேசிய தமிழர் தன்மான பேரியக்கத்தன் இந்த முதன்மை பரிந்துரையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கோபிந்த் சிங், இதனை பிரதமர் அன்வாரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், அவரிடம் உரிய விளக்கத்தை அளிப்பதாகவும் , இக்குழுவினர் பிரதமருடன் ஒரு சந்திப்பு நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதி கூறினார்.

மேலும் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் வாயிலாக இந்திய சமூகத்தின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும், இந்திய சமூகத்தின் அதிருப்தியை போக்கவும், முன்வைக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரை குறித்து அடுத்த இரண்டு வாரத்திற்குள் பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்படும் என்று கோபிந்த் சிங் உறுதி அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்