மாணவன் தி. நவீன் கொலை வழக்கில், ஐவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு

புத்ராஜெயா, ஏப்ரல் 05-

ஆறாம் படிவ மாணவன் தி. நவீன் அடித்து, மிகக்கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியுள்ள ஐந்து நபர்களின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்வதற்கு முன்னதாக இந்த கொலை வழக்கை விசாரணை செய்த பினாங்கு உயர் நீதிமன்றத்தின் விசாரணை குறிப்பாணை அறிக்கைக்காக சட்டத்துறை அலுவலகம் காத்திருக்கிறது.

மேல்முறையீட்டிற்கான அந்த விசாரணை குறிப்பாணை அறிக்கை கிடைத்ததும், பினாங்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பில் 10 முதல் 12 நாட்களுக்குள் முடிவு செய்யப்படும் என்று சட்டத்துறை அலுவலகம் இன்று தம்மிடம் உறுதி அளித்துள்ளதாக சமூக சேவகர் அருண் துரைசாமி தெரிவித்தார்.

நவீன் கொலை வழக்கில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியுள்ள ஐவரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் இயன்றவரை சிறப்பாக தனது பங்களிப்பை வழங்கும் என்று சட்டத்துறை அலுவலகம் உறுதி கூறியிருப்பதாக அருண் துரைசாமி குறிப்பிட்டார்.

இக்கொலை வழக்கில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பில் சட்டத்துறை அலுவலகம் மவுனம் காத்து வந்ததைத் தொடர்ந்து அருண்துரைசாமி தலைமையில் சுமார் 70 க்கும் மேற்பட்டோர், இன்று புத்ராஜெயாவில் உள்ள சட்டத்துறை அலுவலகத்தின் முன் திரண்டு தங்கள் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினர்.

நவீன் கொலை வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில், சட்டத்துறை அலுவலகத்தின் நிலைப்பாடு என்ன என்பதையும் அறிய அவர்கள் முற்பட்டனர்.

தனது மகனுக்கு நீதி கிடைக்கும் வரையில் தொடர்ந்து போராடப் போவதாக நவீனின் தாயார் சாந்தி துரைராஜ் உறுதி பூண்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக அருண்துரை சாமி மற்றும் பொது மக்கள் சட்டடத்துறை அலுவலகத்தின் முன் திரண்டனர்.

நவீன் தாயார் சார்பில் அருண்துரைசாமி, சட்டத்துறை அலுவலகத்தின் உயர்நிலை அதிகாரிகளை சந்தித்து, நிலவரத்தை கேட்டறிந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் 9 ஆம் தேதி, பினாங்கு, புக்கிட் கெலுகோர், ஜாலான் பூங்கா ராயா-வில் 18 வயது நவீன் அடித்து, மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த அப்பகுதியை சேர்ந்த 23 வயது கே. தத்திசன், 24 வயது வி. சர்மாஹ், 32 வயது எஸ். கோபிநாத், 24 வயது எஸ். கோகுலன் மற்றும் 24 வயது ஜே. ராஜேசுதான் ஆகியோரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி பினாங்கு உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த ஐவருக்கு எதிரான கொலை வழக்கை நிரூபிப்பதில் பிராசிகியுஷன் தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி ரட்சி ஹமிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

நவீன் அடித்து, சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சியாக பிராசிகியூஷன் தரப்பில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த பிரவீன் என்பவர், நம்பக்கூடிய சாட்சியாக இல்லை என்று கூறி, ஐவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி ரட்சி ஹமிட் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்