மாற்றுத் திறனாளி மீது சுடு நீர் வீச்சு தாக்குதல் நடத்திய மாதுவிற்கு 10 ஆண்டு சிறை

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 23-

டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மனநலிவுக்கு ஆளான மாற்றுத் திறனாளி மீது வேண்டுமென்றே சுடு நீர் வீச்சு தாக்குதல் நடத்தி, தீக்காயங்களை விளைவித்த மாது ஒருவருக்கு பினாங்கு, பாலிக் புலாவ் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 6 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

ஒரு விற்பனைப் பணிப் பெண்ணான 39 வயது ஊ சாவ் கீ என்ற அந்த மாது, தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி அஹ்சல் ஃபரிஸ் அஹ்மத் கைருதீன் இக்கடும் தண்டனையை விதித்தார்.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 9.24 மணியளவில் பினாங்கு, பாயான் லெப்பாஸ், ஜாலான் ராஜாவலி- யில் உள்ள ஐ – பார்க் அபார்ட்மெண்ட்ஸ் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் உள்ள மின் தூக்கி லிப்டில், மனநலிவுக்கு ஆளான ஒரு மாற்றுத் திறனாளியான 33 வயது A. சோலைராஜ் என்பவர் மீது சுடுநீர் வீச்சு தாக்குல் நடத்தியதாக அந்த மாது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கடும் தீக்காயங்களுக்கு ஆளான சோலைராஜ், இன்னமும் பினாங்கு பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் நிகழ்ந்து, நான்காவது நாளிலேயே இத்தாக்குதலை நடத்திய சீன மாது, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படித்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்த சுடு நீர் வீச்சு தாக்குதலில் மாற்றுத் திறனாளி சோலைராஜ், கழுத்து, தோள்பட்டை, முதுகு முதலிய பகுதியில் தீக்காயங்களுக்கு ஆளாகி, தொடர்ந்து சிகிச்சை பெறும் அளவிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், இத்தகைய அராஜக செயலை விளைவித்த மாதுவிற்கு கூடிய பட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று முன்னதாக, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நோர்டின் இஸ்மாயில் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

லிப்டுக்குள் சோலைராஜ் மீது, அந்த மாது சுடுநீர் வீச்சு தாக்குதல் நடத்தும் காட்சியைக்கொண்ட 20 வினாடிகள் ஓடக்கூடிய CCTV கேமரா பதிவு, சமூக வளைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து ஒரு மாற்றுத் திறனாளிக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த அராஜக செயலுக்கு பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்