உயிரிழந்த அந்த பத்து பேர் அடையாளம் காணப்பட்டனர்

லுமூட், ஏப்ரல் 23-

பேராக், லுமூட்டில் இன்று, அரச மலேசிய கடற்படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி, கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த பத்து வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் தெரிவித்தார்.

7 ஆண்களும், 3 பெண்களும் இவ்விபத்தில் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரச மலேசிய கடற்படையின் லுமூட் மற்றும் கோத்தா கினபாலு ஆகிய கடற்படை தளங்களை சேர்ந்த வீரர்கள் ஆவார்.

இத்துயரச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் பெயர் மற்றும் இதர விவரங்களை அரச மலேசிய கடற்படை வெளியிடும் என்று முகமட் யூஸ்ரி ஹாசன் குறிப்பிட்டார்.

அரச மலேசிய கடற்படையின் 90 ஆம் ஆண்டு நிறைவு தின கொண்டாட்ட நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இந்த விபத்து நிகழ்ந்தது.

HOM மற்றும் FENNEC ரக ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி, நிலை தடுமாறி, இரு ஹெலிகாப்டர்களும் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கின.

இரு ஹெலிகாப்படர்களும் விழுந்து நொறுங்கிய இடங்களான லுமூட், அரச மலேசிய கடற்படை விளையாட்டு அரங்கம் மற்றும் அதனையொட்டிய கடற்படை குளம் ஆகிய பகுதிகளில் விழுந்து கிடக்கும் ஹெலிகாப்டர்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் புலனாய்வு தொடங்கியிருப்பதாக முகமட் யூஸ்ரி ஹாசன் தெரிவித்தார்.

இதனிடையே இவ்விபத்தில் உயிரிழந்து பத்து வீரர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

அரச மலேசிய கடற்படை தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகி, பத்து பேர் உயிரிழந்து இருப்பது இதயத்தை உலுக்கியது என்பதுடன் நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்