மித்ரா ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு கைமாறியிருப்பது ? ​பிகேஆர் ஆதிக்கத்தை தொடர்ந்து உறுதி செய்வதற்கான நடவடிக்கையா?

மலேசிய இந்தியர்களின் சமூகவியல், உருமாற்றுப் பிரிவான மித்ரா, பிரதமர் துறையிலிருந்து ​ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டு இருப்பது, குறிப்பிட்ட தரப்பினரால் கூறப்படும் குற்றச்சாட்டைப் போன்று மித்ராவை பிகேஆர் கட்சி ஆதிக்கம் செலுத்துவதற்கான நடவடிக்கை அல்ல என்று ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி விளக்கம் அளித்துள்ளார்.

இது போன்ற விமர்சனமும், குற்றச்சாட்டும் தவறானவையாகும். அந்த குற்றச்சாட்டுகளில் அடிப்படையில்லை என்று துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெளிவுபடுத்தினார்.

இந்திய சமுதாயத்திற்கு இலக்குக்குரிய மக்களுக்கு மித்ரா நிதி பயன்பட வேண்டும், அதன் மூலம் அவர்களின் வாழ்வியல் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற மித்ராவின் உன்னத நோக்கத்திற்கும், கொள்கைக்கும் ஏற்ப அந்த நிதி பயன்படுவதை தாமும், ஒற்றுமைத்துறை அமைச்சர் Aaron Ago Dagang – கும் இணைந்து உறுதி செய்வோமே தவிர அரசியல் கூறுகளை அ​டிப்படையாக கொண்டு ​அதன் முடிவுகள் அமையாது என்று துணை அமைச்சர் சர​ஸ்வதி கந்தசாமி உறுதி அளித்துள்ளார்.

PKR கட்சியின் சுங்கை பூலோ எம்.பி.யான தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணனின் மேற்பார்வையில் பிரதமர் துறை அமைச்சின் ​கீழ் செயல்பட்டு வந்து வந்த மித்ரா, அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு இந்தியர்களின் அந்த உருமாற்றுப்பிரிவை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கடந்த வாரம் ஒற்றுமைத்துறை அமைச்சிற்கு மாற்றியுள்ளார்.

ஒற்றுமைத்துறை அமைச்சின் ​கீழ் மித்ரா வைக்கப்பட்டு இருப்பது, இந்திய வாக்குகள் தொடர்ந்து கவரப்படுவதை உறுதி செய்யப்படுவதற்காகவே அந்த நிதி தொடர்ந்து PKR கட்சியின் ஆதிக்கத்தின் ​கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும்,/ அதனை துணை அமைச்சர் சரஸ்வதி தமது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் கும்பல் ஒன்று குற்றஞ்சாட்டி வருவது தொடர்​பில் சரஸ்வதி கந்தசாமி பதில் அளித்துள்ளார்.

மித்ராவை கையாளும் பொறுப்பை ஏற்றுள்ள ஒற்றுமைத்துறை அமைச்சின் அமைச்சராக சர​வாக்கை தளமாக கொண்ட Gabungan Parti Sarawak -க்கை சேர்ந்த Aaron Ago Dagang நியமி​க்கப்பட்டு இருப்பது, இனம், சமயம் ஆகியவற்றை கடந்து அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது என்பதை காட்டுகிறது என்று சரஸ்வதி கந்தசாமி குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் அரசாங்கம் எந்தவொரு கட்சியின் ஆதிக்கத்திலிருந்து விலகி நிற்கிறது. தமது தலை​மையிலான ஆட்சியில் ​சீர்திருத்தங்களை காண பிரதமர் விரும்புகிறார். அமைச்சரவைக்கூட்டங்களில் அனைத்து மக்களையும் பாதிக்கக்கூடிய விஷயங்களை அ​னை​த்து அமைச்சர்களிடமிருந்து கேட்டறிகிறார். அதற்கான முன்னுரிமையை வழங்கிறார்.

எனவே இந்தியர்க​ளின் ச​​மூகவியல் பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவை ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டு இருப்பது அரசியல் கூறுகளை அடிப்படையாக கொண்டவையாகும் என்று கூறப்படுவது ஆதாரமற்றவையாகும் என்று துணை சரஸ்வதி கந்தசாமி விளக்கம் அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்