தொழிலாளர்கள் பொறுமை காக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பள விவகாரம் சுமூகமான முறையில் தீர்க்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் அங்கத்தினர்கள் சற்று பொறுமை காக்கும்படி அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கும் , மாப்பா எனப்படும் தோட்ட முதலாளிமார்கள் சங்கத்திற்கும் இடையிலான கூட்டுச் சம்பள ஒப்பந்தம் மீதான பேச்சுவார்த்தை சர்ச்சை தற்போது தொழிலியல் நீதிமன்றத்தில் இருப்பதாக டத்தோ சங்கரன் குறிப்பிட்டார்.

இந்த சர்ச்சையை சுமூகமானத் தீர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக மனிதவள அமைச்சர்களாக பொறுப்பேற்றிருந்த டத்தோ ஶ்ரீ எம் சரவணன், அதன் பின்னர் வந்த வி சிவக்குமார் ஆகியோரிடம் தொழிற்சங்கம் உரிய விளக்கத்தை தந்துள்ளது. எனினும், இருவருமே தற்போது அப்பொறுப்பில் இல்லாததால் புதிய மனிதவள அமைச்சர் ஸ்டீவர் சிம்மிற்கு இவ்விவகாரம் தொடர்பாக கடிதம் அனுப்புயுள்ளதாக டத்தோ சங்கரன் விளக்கினார்.

தோட்டத் தொழிற்சங்கத்திற்கும் மாப்பாவிற்கும் இடையிலான தொழிலியல் வழக்கு மீதான விசாரணை தொழிலியல் நீதிமன்றத்தில் வரும், ஜனவரி 15 – 16 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழிலியல் நீதிமன்றத் தலைவர் இன்னும் நியமிக்கப்படாததால் இவ்வழக்கு விசாரணை எப்போது நடைபெறும் என்பது குறித்து வரும் ஜனவரி 22 ஆம் தேதி முடிவு செய்யப்பட இருக்கிறது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நல்லதொரு முடிவு கிடைக்கும் என்று தொழிற்சங்கம் நம்பிக்கை கொள்ளும் அதே வேளையில், சங்கத்தின் உறுப்பினர்கள் சற்று பொறுமை காக்கும்படி டத்தோ சங்கரன் கேட்டுக் கொண்டார்.

இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் 4 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிர்வாக சபை கூட்டத்திற்குத் தலைமை ஏற்றப் பின்னர், டத்தோ சங்கரன் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிர்வாக சபை கூட்டத்தில் தொழிற்சங்கத்தின் தேசியத் தலைவர் எம் தனபாலன், தேசிய நிதிச் செயலாளர் நேமிநாதன், நிர்வாகச் செயலாளர் ஏ. நவமுகுந்தன் உட்பட மாநிலத் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் சங்கத்திற்கு தங்களின் ஆதரவை புலப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்