மேகாலயாஒரு கருவூலம்

மேகாலயா மாநிலம், இந்தியாவின் கருவூலமாகும். அஸ்ஸாம் மாநிலத்தற்கும், அண்டை நாடான வங்காளதேசத்திற்கும் இடையில் மலைப்பாங்கான பிரதேசத்தில் உள்ளது மேகாலயா மாநிலம்.

மேகாலயா, சுமார் 300 கி.மீ. நீளமும், 100 கி.மீ. அகலமும் கொண்டது. பரப்பளவு 22,429 சதுர கிலோ மீட்டர் ஆகும். தெற்கு எல்லையில் வங்காளதேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளது. நிர்வாக வசதிக்காக மேகாலயா, 11 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் ‘ஷில்லாங்’ ஆகும்.

மேகாலயா ஆரம்பதில் காசி, காரோ, ஜெயந்தியா ஆகிய பழங்குடியினர் வசம் இருந்தது.அவர்கள் தங்கள் சொந்த அரசுகளைக் கொண்டிருந்தனர். பின்னர் 19 ஆம் நூற்றாட்டில் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் வந்தது. அவர்கள் இதை 1835 இல் அஸ்ஸாமுடன் இணைத்தனர்.

1905 இல் வங்கப் பிரிவினையின் போது இந்நிலப்பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1912 இல் வங்கப் பிரிவினை திரும்பப்பெறப்பட்ட போது மீண்டும் அஸ்ஸாமுடன் இணைக்கப்பட்டது.

1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இன்றைய மேகாலயா, அஸ்ஸாமின் இரண்டு மாவட்டங்களாக இருந்தது. 1960 இல் தனி மாநிலம் வேண்டி கோரிக்கைகள் எழுப்பத் தொடங்கியது. அதனால், 1970 இல் ஐக்கிய காசி மலைகள், ஜெயந்தியா மலைகள், காரோ மலைகள் ஆகிய பகுதிகளைக் கொண்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டு, பாதி தன்னாட்சி வழங்கப்பட்டது. அதன்பின் 1972 இல் மேகாலயா மாநிலம் தனக்கான சொந்த சட்டமன்றத்தோடு முழுமையான மாநிலமானது.

மேகாலயா மிதமான தட்பவெப்பம் கொண்ட மாநிலமாகும். அதிகமான ஈரப்பதம் கொண்டது. ஷில்லாங் சிகரம் 1965 மீட்டர் உயரம் கொண்டது. தலைநகருக்குத் தெற்கேயுள்ள சிரப்புஞ்சி, ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியா – பங்காளதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ள காரோ மலைகள் பட்காய் மலைத் தொடரின் ஒரு பகுதியாகும். இப்பகுதியில் வசிக்கும் காரோ பழங்குடியினரின் பெயரே மலைக்கும் சூட்டப்பட்டுள்ளது. இம்மலைப்பகுதி அடர்ந்த காடுகள் உடையது. இப்பகுதி அனைத்துலக முக்கியத்துவம் வாய்ந்த ‘நோக்ரெக் பயோஸ்பியர் ரிசர்வ் ‘வனப்பகுதியாகும். காரோ, மலைகளின் கிழக்கே அமைந்துள்ளது. இங்கு காசி மலைவாழ் இன மக்கள் வசிக்கின்றனர்.

சோரா, முன்பு சிரபுஞ்சி என அழைக்கப்பட்டது. 2007 இல் மேகாலயா மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா என்று மாற்றியது. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசால் சோரா என்ற பெயர் மருவி, சிரபுஞ்சி என்று ஆனது. சோரா, காசி மலையில் உச்சியின் தென் பகுதியில் வங்காளதேசத்தை நோக்கி அமைந்துள்ளது.

வங்காள விரிகுடாவிலிருந்து வரும் பருவக் காற்றினால் இப்பகுதி மிக அதிக அளவு மழையைப் பெறுகிறது. தென் மேற்கு மற்றும் வடக்கிழக்குப் பருவக் காற்றால் மழை பெறுவதால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் மழை பொழிகிறது.

முன்பு உலகிலேயே அதிக அளவு மழை பெறும் பகுதி சோரா என கருதப்பட்டது. எனினும் தற்போதைய ஆய்வுகளின்படி சோராவிற்கு அருகில் உள்ள மெளசின்ரம் என்ற ஊரே உலகிலேயே அதிக அளவு மழையைப் பெறும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சோரா, இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. ஆனால், சோரா தன் சாதனைகளைத் தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.

சோராவில் 1861 ஆம் ஆண்டு ஜுலையில் பெற்ற 9,300 மி.மீ. மழைப்பொழிவே உலகின் அதிக அளவான ஒரு மாத மழைப் பொழிவாகும். சோராவில் 1860 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 1961 ஆம் ஆண்டு வரை பெற்ற 26,461 மழைப் பொழிவே உலகின் அதிக அளவிலான ஒரு வருட மழைப் பொழிவாகும்.

கிழக்கு காசி மலைகளை உள்ளடக்கிய மாவட்டம், உலகில் அதிகமான சராசரி ஆண்டு மழைப் பொழிவைக் கொண்ட இடமாகும். இங்கு ஆண்டொன்றுக்கு 11,872 மி.மீ. மழை பொழிகிறது.

மேகாலயாவில் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் நேபாள மொழி, வங்காளமொழி, அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் பழங்குடி மக்களின் காசி மொழி மற்றும் காரோ மொழிகள் அதிகம் பேசப்படுகின்றன.
மலைகளாலும், காடுகளாலும் சூழப்பட்ட மேகாலயாவின் பொருளாதாரம், விவசாயத்தையே நம்பிள்ளது. பழந்தோட்டங்கள், பிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் விற்பனையும் பெருமளவில் நடைபெறுகிறது.

மேகாலயாவின் தனித்துவம், மரங்களின் வேர்களைக் கொண்டு இயற்கையான முறையில் அமைக்கப்படும் பாலங்களே பிரசித்திப்பெற்றதாகும். இதனை வேர்பாலங்கள் என்று அழைக்கிறார்கள்..

மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் ஷில்லாங். கிழக்குக் காசி மாவட்டத்தில் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ளது. இது மலை வாழியிட நகரமாகும். ஷில்லாங், கிழக்கின் ஸ்காட்லாந்து என்று புகழப்படுகிறது.

இந்நகரம் பிரம்மபுத்திரா ஆறு மற்றும் சுர்மா ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. மூன்று மழைகளால் சூழல்ப்பட்ட ஒரு மிக அழகான நகரமாகும். அழகிய இயற்கை காட்சிகளுக்கும், பாரம்பரியங்களுக்கும் பெயர் பெற்றது. ஆண்டு முழுவதும் உடலுக்கும், மனதுக்கும் இனிமையான சூழலை இந்நகரம் கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்