கைமாறிய தஞ்சோங் மாலிம்

மலேசியாவின் வெள்ளி மாநிலம் என்ற சிறப்புப் பெயருடன் விளங்குகிறது பேரா மாநிலம். பேராவின் வடக்கே ஒரு பகுதியில் பெலும் வனப்பூங்கா அமைந்துள்ள நிலையில் இன்னொரு பகுதியில் பங்காலான் உலு எனும் சிறு நகரும் அமைந்துள்ளது.

அதே சமயம் தென் தாய்லாந்துடன் பேரா மாநில எல்லை ஒட்டி அமைந்துள்ளது. வடமேற்குப் பகுதியில் கெடா, பினாங்கு மாநிலங்களையும் கிழக்குப் பகுதியில் கிளாந்தான், பகாங் மாநிலங்களையும் ஒட்டியுள்ளது.

பேரா மாநிலத்தின் தென் கோடியில் அமைந்துள்ள தஞ்சோங் மாலிம் நகரைக் கடந்தால் சிலாங்கூர் மாநிலத்தை அடைந்து விடலாம்.

மலாயாவாக இருந்த போதிலும், அன்றைய சியாம் ஆக இருந்த. இன்றைய தாய்லாந்து எல்லையைப் பிரிப்பதில் எந்தவித சிக்கலும் ஏற்பட்டதில்லை. ஆனால், தென் பேரா பகுதியில் மிகப் பெரிய பூகம்பமே வெடித்தது என்பது வரலாற்று உண்மை.

இன்று பேராவின் வசம் உள்ள தஞ்சோங் மாலிம், ஒரு காலத்தில் சிலாங்கூரின் வசம் இருந்தது. பிறகு எப்படி இப்போது பேரா மாநிலத்தில் இருக்கிறது ? என்ன நடந்தது ? அதைத் தெரிந்து கொள்ள நாம் 1700 களுக்குப் பின்னோக்கி காலப் பயணம் செய்ய வேண்டும். வாருங்கள் 1700க்குப் போகலாம்.

அன்று….

இயற்கையாகவே பெர்னாம் நதி சிலாங்கூர் – பேரா மாநிலங்களுக்கிடையே எல்லைக் கோடாக விளங்கி வந்ததும. பேராவின் இறுதி நகராக அப்போது தஞ்சோங் ஜம்பூவையும் சிலாங்கூரின் தொடக்கமாக உலு பெர்னாமும் அமைந்தது.

ஆனால், 19ஆம் நூற்றாண்டில் எல்லைப் பகுதி பிரச்சனை தொடங்கியது. பேரா – சிலாங்கூர் இடையேயான அரசாட்சி, அதிகாரப் போராட்டம் பெர்னாம் ந தி பகுதியில் எல்லைப் பிரச்சினைக்கு வழி வகுத்தது.

சிலாங்கூரின் பெர்னாம் நதியில் தொடங்கி ஈயத்திற்குப் புகழ் பெற்ற பேரா மாநிலத்தின் கோலா பீடோர் பகுதி வரை சிலாங்கூர் தனது அதிகாரத்தைச் செலுத்தியது.

1778 முதல் 1826 வரை சிலாங்கூரை ஆட்சி செய்து வந்த சுல்தான் இபுராகிம் காலத்தில், பேரா மாநிலத்தைக் காட்டிலும் சிலாங்கூர் மாநிலம் ஈயம் வெளியீட்டில் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, கோலா பீடோரையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து தமத் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் நடந்த போரிலும் பேராவை ஆட்சி செய்து வந்த சுல்தான் ஆஹ்மாடின் சிலாங்கூரின் சுல்தான் இப்ராகிமிடம் தோல்வி கண்டார். 1804இல் பெற்ற வெற்றியைச் சுட்டிக்காட்டி, பேரா மாநிலம் சிலாங்கூருக்குக் கீழ் வந்து விட்டது என சிலாங்கூர் சுல்தான் அறிவித்தார்.

பேரா மாநிலத்தைத் தமதாக்கிக் கொண்டதோடு அங்கு பிரச்சனையாக இருந்து வந்த சியாமியர்களை 1822இல் விரட்டி அடிக்க உதவினார் சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் இபுராகிம். பாதுகாப்பு கருதியும் வரி வசூலிக்கவும் இராஜா ஹசானை தமது நிகராளியாக பேராவில் நியமித்தார்.

இராஜா ஹசானின் அராஜகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத பேரா ஆட்சியாளர், இராஜா ஹசானை பேராவிலிருந்து விரட்டியடிக்க எண்ணினார்.

ஆண்டுகள் சில உருண்டோடிய பிறகு, நீண்ட காலமாக இருந்து வந்த சிலாங்கூர் – பேரா மாநில எல்லைப் பிரச்சனை, 1825இல் ஒரு முடிவுக்கு வந்தது. அவ்வாண்டில் கையொப்பமிடப்பட்ட அண்டர்சன் உடன்படிக்கைதான் இந்தத்தீர்வுக்குக் காரணமாக அமைந்தது.

இந்தக் காலக்கட்டத்தில், கிழக்கிந்திய கம்பெனி வாயிலாக ஆங்கிலேயர்கள் தங்களின் வியாபாரத்தை சிலாங்கூரில் தொடங்க விருப்பம் தெரிவித்தனர். அதனை சிலாங்கூர் ஆட்சியாளரான சுல்தான் இப்ராகிம் வரவேற்றார். மேலும், சிலாங்கூரில் நிலவிவரும் சில உள்நாட்டு அரசியல் பிரச்சனைகளையும் தீர்க்க இது நல்ல வாய்ப்பாக அவர் கருதினார்.

அதன்படி, 1825 ஆம் ஆண்டு ஆகஸ்டு 20 ஆம் நாள் இருவகையான உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டன.

பேரா – சிலாங்கூர் அமைதி உடன்படிக்கை / சிலாங்கூர் – கிழக்கிந்திய கம்பெனியுடனான நட்புமுறை உடன்படிக்கை
o பேரா – சிலாங்கூர் மாநிலங்களுக்கு இடையிலான நிரந்தர எல்லை உருவாக்கப்பட்டு அதனை மீறி பேராவை சிலாங்கூர் தாக்காது.
o அந்த நிரந்தர எல்லைக் கோடாக பெர்னாம் நதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
o பீடோர் நதிக் கரை பகுதியில் இருந்து இராஜா ஹாசன் வெளியேற சிலாங்கூர் சுல்தான் ஒப்புக் கொள்ள வேண்டும்.
o சுல்தான்களின் ஆட்சிப் பகுதியில், கடற்கொள்ளையர்கள் ஒளிந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது.

இந்த உடன்படிக்கையால் சிலாங்கூருக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நல்ல உறவை நிலைத்திருக்கச் செய்யும் என சிலாங்கூர் சுல்தான் தீர்க்கமாக நம்பினார்.

இதே உடன்படிக்கையை 1825 ஆம் ஆண்டுசெ ப்டம்பர் 6 ஆம் நாள் பேரா மாநிலத்துடன் செய்துகொண்டது கிழ்க்கிந்திய கம்பெனி. இந்த இரு உடன்படிக்கையால் இரு மாநிலங்களுடனான உறவை ஆங்கிலேயர்கள் வலுப்படுத்திக் கொண்டனர்.

இன்று…

அன்று தொட்டு இன்று வரை பேரா – சிலாங்கூர் மாநிலங்களின் எல்லையாக இரு மாநிலங்களுக்கும் இடையில் ஓடும் பெர்னாம் நதியை இயற்கையால் அமைந்த எல்லையாக வகைப்படுத்தப்பட்டது. பேராவின் இறுதி நகராக தஞ்சோங் ஜம்பூவையும் சிலாங்கூரின் தொடக்கமாக உலு பெர்னாமும் அமைந்தது.

அன்றைய தஞ்சோங் ஜம்பூ, இன்றைய தஞ்சோங் மாலிம் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் எல்லைக் கோட்டை இயற்கையாக விளங்கும் பெர்னாம் ஆற்றை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்தாலும், இன்றளவும் தஞ்சோங் மாலிம் சிலாங்கூரைச் சேர்ந்ததா இல்லை பேராவைச் சேர்ந்ததா எனும் குழப்பம் சற்றே நீடித்து வருகிறது.

தஞ்சோங் மாலிமுக்கு அடுத்துள்ள உலு பெர்னாமில் சில தொலைபேசி எண்களுக்கு 05 எனக் குறிப்பிடப்படுவதும், தஞ்சோங் மாலிமில் உள்ள சில தொலைபேசி எண்களுக்கு 03 எனக் குறிப்பிடப்படும் குழப்பமும் இருந்து வந்தது.
சில நேரங்களில் வீட்டு முகவரியின் போஸ்ட்கோட் கூட இந்தக் குழப்பத்திற்கு இலக்காகும்.

உறவுகளும் பிரிந்தன

பெர்னாம் ஆறு மாநில எல்லைக் கோடாக இருந்து பேரா – சிலாங்கூரை மட்டும் பிரிக்கவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டில் பல குடும்ப உறவுகளின் பிரிவின் அடையாளமாகவும் இருந்தது என்பதும் உண்மை.

கடந்த 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்றுத் தாக்கத்தால் நாடே முடங்கியது, குறிப்பாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்தது. வடக்குத் தெற்கு நெடுஞ்சாலை முதல் சாதாரண சாலை வரை அனைத்தும் மூடப்பட்டிருந்த காலக் கட்டம் அது. மாவட்ட எல்லைகளைக் கடக்கலாம் என அறிவிப்பும் அனுமதியும் இருந்தால்கூட, மாநில எல்லையைக் கடக்க அனுமதி கிடைக்காமல் இருந்த சமயம் அது.

அவ்வாறான சூழலில், பெர்னாம் ஆற்றின் ஒரு புறம் இருக்கும் உலு பெர்னாமுக்கும் ஆற்றின் மறுபக்கம் இருக்கும் தஞ்சோங் மாலிமிற்கும் இணைப்பாக இருந்த பாலமும் முட்கம்பிகளால் மூடப்பட்டது.

இப்பகுதி இரு மாநிலங்களில் எல்லையை ஒட்டி இருப்பதால், இரு மாநிலங்களைக் கடந்து அடுத்த மாநிலத்தில் வேலைக்குச் செல்வது மிக வழக்கமான ஒன்று. ஆனால், நடமாட்டக் கட்டுப்ப்பாட்டு ஆணைக் காலத்தில் இந்த ஆற்றுக்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரிய வேண்டிய சூழல் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

இந்த இணைப்புப் பாலத்தில் மனதை உருக வைக்கும் பல சம்பவங்கள் இரு எல்லைகளிலும் நடந்ததை இன்னமும் பலரால் மறக்க முடியாதவை.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு பல மாதங்களுக்கு முன்னர் தமது அண்ணனைச் சந்தித்த தங்கை ஒருவர், மீண்டும் அவரைச் சந்திக்க முடியாமல் போய் விடுமோ எனும் பயத்தில் இருந்தக் காலத்தில் முட்கம்பிகள் இடையில் இருக்க, அன்பு பொங்கிய அவர்களின் சந்திப்பு அந்தப் பாலத்தில் நடந்தது. அந்தக் காட்சி மனதை உருக வைத்தது என அந்தக் காணொலியைப் பார்த்தவர்கள் தெரிவித்தார்கள். நோன்புப் பெருநாளான ஷவ்வால் 1 ஆம் நாள் தமது அண்ணனை சந்திக்க நேர்ந்தது மிகப் பெரிய பாக்கியம் எனக் கூறினார் தங்கையான நூர் அடில்லா.

அதே மாதிரி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால், பிரிவுற்றிருந்த தாய்-மகள், கணவன்-மனைவி என பல உறவுகள் துயரில் ஆழ்ந்திருந்து, பாலத்தின் இரு முணைகளிலும் வந்து நின்று காத்திருப்பதும், தூரத்தில் இருந்து கைகாட்டுவதும் அக்காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்களாகும்.

ஒரு முணையில் பிள்ளையும் மறுமுணையில் தாயும் நிற்க, ஓர் அனிச்சலை வாங்கி தாய் பிள்ளைக்காக அனிச்சலை வெட்டுவதும் கண்ணீர் மல்க வாழ்த்து கூறுவதும் உணர்ச்சி பொங்க அரங்கேறிய காட்சியாகும்.

விதிமுறைகளுக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் இருந்து மீட்சி நிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு மாற்றம் காணும் போது, மாநில எல்லைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தடைகளையும் முட்கம்பிகளையும் நீக்க அரசாங்கம் அறிவித்த நிலையில், அதனைப் பார்க்கவே அந்த பாலத்திற்கு இரு முனைகளிலும் மக்கள் கூடினர். திருவிழாக் கோலமாக பெர்னாம் பாலம் காணப்பட்டது. நள்ளிரவு 12.00 மணிக்கு அப்பாலம் திறக்கப்பட இருந்தாலும் இரவு 7.00 மணிக்கே மக்கள் அங்கு கூடத் தொடங்கினர்.

அங்கு பணியாற்றி வரும் தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்ற அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும் பெர்னாம் பாலத்தில் போடப்பட்டிருக்கும் தடைகளையும் முட்கம்பிகளையும் அகற்றுவதைக் காணவும் மக்கள் கூடினர்.

பெர்னாம் நதியால் பிரிக்கப்பட்ட பலர், இதைத் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத வரலாற்றுத் தருணம் எனக் கருதினார்கள். அதன் பொருட்டே பலர் அங்கு படம் எடுப்பதும் காணொலி பதிவு செய்வதிலும் மும்முரம் காட்டினார்கள்.

நள்ளிரவு 12 மணி ஆனதும், மாநில எல்லையைக் கடக்கும் தடை நீங்கி இரு புறத்திலும் உள்ள மக்கள் வாகனங்களில் ஹார்ன் அடித்துக் கொண்டே பெர்னாம் நதியைக் கடக்க அந்தப் பாலத்தைப் பயன்படுத்தி ஆராவாரம் செய்து பயணித்தனர்.

பேரா – சிலாங்கூரைப் பிரிக்கும் பெர்னாம் நதியும் அந்த மாநிலங்களை இணைக்கும் பாலமும் பல வரலாற்றுச் சிறப்புகளையும் மறக்க முடியாத அனுபவங்களையும் தாங்கி நிற்கின்றன என்றால் அது மிகையாகாது. பேராவில் இருந்து சிலாங்கூருக்குச் செல்ல பல வழிகள் இருந்தாலும், ஜாலான் பெசார் என்றழைக்கப்படும் இந்தச் சாலையில் பெர்னாம் ஆற்றைக் கடந்து அந்தப் பாலத்தில் பயணிப்பது பலரின் தேர்வாக அமைந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்