வாளுடன் காட்சித் தரும் அம்னோ இளைஞர்பிரிவுத் தலைவர் மீது விசாரணை இல்லையா?

கோலாலம்பூர், ஏப்ரல் 04-

வாள் ஒன்றை கையில் ஏந்தியவாறு காட்சி தரும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேஹ்- க்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்படவில்லை என்பதால் அவர் மீது விசாரணை நடத்தப்படாது என்று காரணம் கூறியிருக்கும் போலீஸ் துறையை வழக்கறிஞர் குழுவினர் கடுமையாக சாடினர்.

போலீஸ் துறையின் இந்த பதில், காவல் துறையினர் ஆள்பார்த்து நடவடிக்கை எடுக்கின்றனர், விசாரணையில் பாகுபாடு காட்டுகின்றனர் என்பதையே காட்டுகிறது என்று வழக்கறிஞர் அமைப்பான Lawyers For Liberty தெரிவித்துள்ளது.

அந்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் , வாள் ஒன்றை கையில் ஏந்தியவாறு போஸ் கொடுத்து, அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து, எதுவாக இருந்தாலும் எங்களின் நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம், மண்டியிட்டு சாவதைவிட எதிர்த்து நின்று சாவதே மேல் என்று சவால் விடும் தோரணையில் அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார் என்றால் அத்தகைய நபரை போலீஸ் துறை விசாரணை செய்யாதது, போலீஸ் துறையின் பணிக்கு முரணானதாகும் என்று Lawyers For Liberty அமைப்பின் இயக்குநர் சயிட் மாலிக் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபரை விசாரணை செய்யாதது, பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பாதுகாக்கும் பிரதான அமைப்பு என்ற முறையில், 1967 ஆம் ஆண்டு போலீஸ் சட்டம் 3 ஆவது பிரிவின் கீழ் தனது சட்டப்பூர்வ கடமையை காவல் துறையினர் மீறியுள்ளனர் என்று சயிட் மாலிக் குறிப்பிட்டார்.

பொது அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஒரு நபரை விசாரணை செய்வது போலீஸ் து றையின் தார்மீக கடமையாகும். ஆனால், போலீஸ் புகார் இல்லை என்று கூறுவது சட்டத்தை அமல்படுத்தும் விவாகரத்தில் சில குறிப்பிட்ட வழக்குகளில், போலீசார் கண்களை வெறுமனே மூடிக்கொள்கின்றனர் என்பதையே காட்டுகிறது என்று சயிட் மாலிக் குற்றஞ்சாட்டினார்.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று செனட்டர் ஒருவர் ர் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன், அந்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருக்கு எதிராக போலீஸ் துறை எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்று கூறியிருப்பது தொடர்பில் Lawyers For Liberty வழக்கறிஞர் குழுவினர் எதிர்வினையாற்றியுள்ளார்.

போலீஸ் துறை என்பது ஒரு குற்றவியல் சம்பவம் நிகழ்ந்து இருப்பதை உணர்ந்த அடுத்த கணமே விசாரணை செய்ய வேண்டுமே தவிர புகார் கிடைக்கும் வரை காத்திருக்க கூடாது.

போலீஸ் படைத் தலைவரின் அறிக்கை , அவரின் பலவீனத்தையும், பொறுப்பற்றத் தன்மையையும் காட்டுகிறது என்று சயிட் மாலிக் குற்றஞ்சாட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்