விடுதலை நாயகனின் அடுத்த சம்பவம்; கருடன் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டு சூரி – மெர்சலான ட்ரைலர் இதோ

இந்தியா, மே 21-

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கருடன் திரைப்படத்தின் மாஸான ட்ரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக கலக்கி வந்த சூரி, கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் ஹீரோவாக நடிக்க கமிட்டான திரைப்படம் தான் கருடன். இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும், எதிர்நீச்சல், காக்கிசட்டை போன்ற படங்களை இயக்கியவருமான துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார்.

கருடன் திரைப்படத்தில் சூரி உடன் சசிகுமார், சமுத்திரக்கனி, மலையாள நடிகர் உன்னி முகுந்தன், நடிகை ரோஷினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற மே மாதம் 31-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதுமட்டுமின்றி இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அந்த விழாவில் கருடன் திரைப்படத்தின் மாஸான ட்ரைலர் வெளியிடப்பட்டது. அந்த ட்ரைலரில், நம்ம ஆசைப்பட்ட விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ இயற்கையோ அதை சரியான வழியில முடிச்சி வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திக்கிட்டு இருக்கு என்கிற பின்னணி குரலுடன் தொடங்கும் இந்த ட்ரைலரில் பின்னர் ஒவ்வொருவரின் கேரக்டர் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதன்படி சசிகுமார் ஆதியாகவும், உன்னி முகுந்தன் கருணாவாகவும் நடித்திருக்கின்றனர். நடிகர் சூரி சொக்கன் என்கிற கதாபாத்திரத்தில் கருணாவின் முரட்டு விசுவாசியாக நடித்திருப்பதாக ட்ரைலரில் காட்டி இருக்கின்றனர். இவர்கள் மூவரை சுற்றி தான் கதை நகரும் என்பது ட்ரைலரிலேயே தெரிகிறது. அதுமட்டுமின்றி நடிகர் சூரி இப்படத்தில் ஆக்‌ஷனிலும் மிரட்டி இருக்கிறார். இப்படத்துக்கு பின் அவர் ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். கருடன் படத்தின் ட்ரைலர் தற்போது யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்