வெறும் ஒரு நாள் வகுப்புக்கு சென்றவர் பல்லை சரிசெய்யும் சேவையில் ஈடுபட்டது அம்பலம்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 05-

பல்லை சரிசெய்யும் வகுப்புக்கு ஒருநாள் மட்டுமே சென்றுவிட்டு, பொதுமக்களுக்கு கடந்த ஈராண்டுகளாக அச்சேவையை வழங்கி வந்த ஆடவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

சிலாங்கூர், டாமான்சாரா பெர்டானா-வில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த அந்நிலையம், திக் தொக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று வந்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக அந்நிலையத்தை உளவு பார்த்து வந்த சிலாங்கூர் சுகாதார துறையின் பல் சுகாதார பிரிவு, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் துணையுடன் கடந்த புதன்கிழமை மதியம் 12 மணியளவில் அந்நிலையத்தை முற்றுகையிட்ட போது, அந்த விவகாரம் அம்பலமானது.

அந்நேரத்தில், வாடிக்கையாளர் ஒருவருக்கு பல்லை சரி செய்யும் சேவையை வழங்கிக்கொண்டிருந்த 23 மற்றும் 24 வயதுதக்க தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், சம்பந்தப்பட்ட ஆடவர் அழகு நிலையம் ஒன்றில் ஈராயிரம் வெள்ளியை செலுத்தி ஒருநாள் வகுப்பில் மட்டுமே, பல்லை சரிச்செய்யும் வேலையைக் கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களிடம் 400 வெள்ளி முதல் ஆயிரம் வெள்ளி வரையில் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு அந்த சேவையை அவ்விருவரும் வழங்கி வந்துள்ளனர். அந்நிலையத்திலுள்ள உபகரணங்கள் உள்ளிட்ட தளவாடங்கள் அனைத்தும் இணையத்தில் வாங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

பல்லை சரி செய்வதற்கான சேவைக்கு பயிலாமலும் சட்டவிரோதமாக அச்சேவையை வழங்கியதற்காகவும் 2018ஆம் ஆண்டு பல் சட்டத்தின் கீழ், அவ்விருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. விசாரணை உறுதி செய்யப்பட்டால், அதிகபட்சம் 300 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 6 ஆண்டுகளுக்கும் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என சிலாங்கூர் சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்