அல்லா சொல்லை தற்காக்கச் சிறப்பு சட்டம் வேண்டும்! பெர்சாத்து கட்சி பரிந்துரை

கோலாலம்பூர், ஏப்ரல் 05-

நாட்டில் இஸ்லாம் சமயத்தின் புனித தன்மையை பாதுகாக்க அரசாங்கம் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். அப்போதுதான், அல்லா சொல் கொண்ட காலுறைகள் விற்பனை செய்யப்பட்டது போன்ற விவகாரங்கள் மீண்டும் நிகழாது என பெர்சாத்து கட்சி பரிந்துரைத்துள்ளது.

இஸ்லாம் சமயத்தை பாதுகாக்க,மக்களவையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு முன்பு கொண்டு வந்திருந்த பல தனிநபர் சட்ட மசோதாக்கள் வெறுமனே நிராகரிக்கப்பட்டது அதிருப்தியளிப்பதாக, பெர்சாத்து கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ ஹம்ஜாஹ் சய்னுட்டின் தெரிவித்தார்.

தங்கள் தரப்பில் கொண்டு வரப்பட்ட பல சட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதனை அரசாங்கம் சிறிதும் கண்டுக்கொள்ளாமல் உள்ளது. இஸ்லாம் சமயம் தொடர்பில், எதை பேசலாம், எதைப் பேசக்கூடாது என்பதற்கான ஒரு தெளிவான வரையறை இன்றைய சூழலில் தேவைப்படுகின்றது.

ஒவ்வொரு சூழலிலும் இஸ்லாம் சமயத்தின் புனிதத் தன்மையை தற்காப்பதற்கு முழுமையான சட்டம் நாட்டில் இருப்பதை உறுதிபடுத்துவதில் அரசாங்கம் இனிமேலாவது தீவிர காட்ட வேண்டும். சமயத்திற்கு எதிரான குற்றங்களுக்கு ஏற்புடைய தண்டனைகளை அது கொண்டிருப்பது அவசியமாகின்றது என்றார் அவர்.

அவ்வகையில், சர்ச்சைக்குரிய காலுறை விவகாரம் நாட்டில் மீண்டும் நிகழாமல் இருப்பதை அனைத்து தரப்பினரும் உறுதிபடுத்த வேண்டும் என்றும் அதில் தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பேரரசர் விடுத்துள்ள உத்தரவிற்கு பெர்சாத்து கட்சி ஆதரவளிக்கின்றது.

காலுறை விவகாரத்தை பயன்படுத்தி சில தரப்பினர் நிலைமையை மோசமடைய செய்வதை தவிர்ப்பதோடு, அமலாக்க தரப்பினர் அவர்களின் கடமையை செய்ய வழிவிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவருமான ஹம்ஜாஹ் சய்னுட்டின் கேட்டுக்கொண்டார்.

அல்லா சொல்லை தற்காக்கும் நோக்கில், கடந்தாண்டு ஜூன் 8ஆம் தேதி ஜாசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கிபிலி இஸ்மாயில் கொண்டு வந்திருந்த தனிநபர் தீர்மானம் மக்களவையில் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்