100 திருக்கோயில்களில் சமய நிகழ்ச்சிகளை நடத்த இலக்கு

அர்த்தஞான இயக்கத்தின் சார்பாக, வெள்ளிக்கிழமை தோறும் சமய ஒன்று கூடல் நிகழ்ச்சி பிரிக்ஃபீல்ட்ஸ் ஶ்ரீ சக்தி கற்பக விநாயகர் கோயிலில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இதனை ஒருமைபாட்டு அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தொடக்கி வைத்தார்.

இளம் மாணவர்கள் மட்டும் இன்றி, அவர்களின் பெற்றோர்கள், இவ்வட்டாரத்தில் இருக்கக் கூடிய பணியாளர்கள், பொது மக்கள் அனைவரும் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படும் நீண்ட உணவு இடைவேளையைப் பயன்படுத்தி, இங்கு இந்த ஆலயத்திற்கு வந்து திருமுறை ஓதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு சமய உணர்வை உள்வாங்கிக் கொள்ளலாம். மேலும், இங்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது என சரஸ்வதி கந்தசாமி குறிப்பிட்டார்.

கடந்த 4 மாதங்களாக சோதனை அடிப்படையில் இந்த நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இன்று டிசம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, அதிகாரப்பூர்வத் தொடக்க விழா கண்டது.

அமைச்சரவை மறு சீரமைப்பு செய்யப்பட்ட பின்னர், ஒருமைபாட்டு அமைச்சின் சார்பில் அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த சமய ஒன்று கூடல் நிகழ்ச்சியை அர்த்தஞான இயக்கத்தோடு இணைந்து, மலேசிய இந்து தர்ம மாமன்றத்துடனும், மலேசிய இந்து சங்கத்துடனும் இணைந்து நடத்தப்படுவது மிகச் சிறப்பான முயற்சி எனவும், மற்ற ஆலயங்களிலும் இது பின்பற்றப்பட வேண்டிய ஒன்று எனவும் சரஸ்வதி குறிப்பிட்டார்.

அந்த வகையில், முதல் கட்டமாக 2024இல் குறைந்தது 100 திருக்கோயில்களில் இது போன்ற சமய ஒன்று கூடல் நிகழ்ச்சியை நடத்தப்பட வேண்டும் என துணை அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ், இதற்கு உண்டான அனைத்து உதவிகளையும் தாம் திரட்டித் தருவதாகவும் சரஸ்வதி குறிப்பிட்டார்.

முறையாக சமயத்தையும் திருமுறையையும் கற்றவர்களிடம் இருந்து நம் இளம் தலைமுறையினர் கற்றுக் கொள்வதால், தெளிவான சிந்தனையுடன் ஒழுக்க சீலர்களாக அவர்கள் எதிர்காலத்தில் திகழ்வார்கள் எனத் துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்