இந்து சங்கம் மீதான வழக்குகள் மீட்பு – ஆர்.எஸ்.என். ராயர் அறிவிப்பு

பினாங்கு இந்து அறப்பணி வாரியம், தொடுத்துள்ள வழக்குகளை பரிசீலனை செய்து அவற்றை மீட்டுக்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டு, பல வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த அறவாரியத்தின் தலைவர் ஆர்.எஸ். என் ராயர் தெரிவித்துள்ளார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தொடுத்த வழக்குகளில் குறிப்பாக, மலேசியா இந்து சங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வாக்குகளை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று தாம் முன்வைத்த பரிந்துரைக்கு அறப்பணி வாரியத்தின் ஆணையர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இணக்கம் தெரிவித்து வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜெலுத்தோங் எம்.பி.யுமான ஆர்.எஸ். என் ராயர் குறிப்பிட்டடார்.

இந்து சமயம் என்பது சனாதன தர்மத்தை வலியுறுத்தக்கூடியது. தர்மமும், சமாதானமே பிரதானமாகும். அந்த வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக தாம் பொறுப்பேற்றப்பின்னர் ஆணையர்களின் இணக்கத்துடன் அவ்வழக்குகள் மீட்டுக்கொள்ளப்பட்டதாக ராயர் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை பினாங்கில் இந்து அறப்பணி வாரியத்தின் அழைப்பை ஏற்று, அறப்பணி வாரிய அலுவலகத்திற்கு வருகை தந்த மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஆர்.எஸ் மோகன் ஷானை வரவேற்று, அவருடன் இணைந்து அறப்பணி ஆணையர்கள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் ராயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்து அறப்பணி வாரியத்தின் முந்தைய நிர்வாகத்தில் தவறுகள் ஏதும் நடந்து இருக்குமானால் வாரியத்தின் நடப்புத் தலைவர் என்ற முறையல் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ராயர் குறிப்பிட்டார். வருகின்ற காலங்களில் மலேசிய இந்து சங்கத்துடன் இணைந்து பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒத்துழைக்கும் என்று ராயர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பேசிய டத்தோ மோகன் ஷான், இவ்வழக்குகள் யாவும் தனிப்பட்ட நலனுக்காக தொடுக்கப்பட்ட வழக்குகள் அல்ல. சமயத்தை தற்காப்பதற்காக தொடுக்கப்பட்ட வழக்குகளாகும் என்றார்.

எனினும் இந்து சமயம், சமதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு எதிராக தாம் தொடுத்த வாக்குகளையும் மீட்டுக்கொள்வதாக டத்தோ மோகன் ஷான் அறிவித்தார்.

இந்த செய்தியாளர் கூட்டத்தில் அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஆர். லிங்கேஸ்வரன், ஆணையர்களான டத்தோ J. தினகரன், பகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் உட்பட இதர ஆணையர்களும் கலந்து கொண்டனர்.

Caption
செய்தியாளர்கள் கூட்டத்தில் ராயர், டத்தோ மோகன் ஷான் மற்றும் அறப்பணி வாரியத்தின் இதர ஆணையர்கள்

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்