2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மலேசியா ஏற்று நடத்தாது அமைச்சரவை முடிவு

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை மலேசியா ஏற்று நடத்தாது என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னாஹ் இயோஹ் அறிவித்துள்ளார்.

இந்த அனைத்துலக விளையாட்டுப் போட்டியை மலேசியா ஏற்று நடத்துவதால் ஏற்படக்கூடிய சாதக,பாதக விளைவுகளை நன்கு ஆராய்ந்ததில் மலேசியாவிற்கு வழங்கப்பட்ட அந்த வாய்ப்பை நிராகரிப்பது என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை ஏற்று நடத்தும் உபசரணை நாடு என்ற முறையில் ஆஸ்திரேலியா விலகிக்கொண்டதைத் தொடர்ந்து கடந்த 1998 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய நாடு என்ற முறையில், இம்முறை கோலாலம்பூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக ஹன்னா இயோ தெரிவித்தார்.

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி சம்மேளனம், கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி, மலேசியாவிற்கு இந்த வாய்ப்பை வழங்கியதாக ஹன்னா இயோ சுட்டிக்காட்டினார்..

இது தொடர்பாக அந்த சம்மேளனத்தின் பொறுப்பாளர்களுடன், தாமும் , இரண்டாவது நிதி அமைச்சர் அமீர் ஹம்ஜாஹ் அசிசான்-னும் நடத்திய பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் குறித்து இன்று அமைச்சரவைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த அனைத்துலகப் போட்டியை மலேசியா ஏற்று நடத்த வேண்டுமானால், 603 மில்லியன் வெள்ளி அல்லது 60 கோடியே 30 லட்சம் வெள்ளி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு அந்த வாய்ப்பை நிராகரிப்பதென அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்