லங்காவியில் மிதக்கும் உணவகம்

‘Hole In The Wall’ எனப்படும் மிதக்கும் உணவகமும் அதன் மீன் வளர்க்கும் இடமும்,  லங்காவியில் நாம் அவசியம் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. அந்த உணவகத்தின் பெயர் கேட்பதற்குச் சற்று விசித்திரமாக இருந்தாலும், அவ்வுணவகத்தின் வித்தியாசமான பெயர் தான் அங்கு வரும் சுற்றுப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

பழமையான தோற்றத்துடன், இயற்கை சூழலோடு கலந்திருக்கும், எழில் மிக்க Hole In The Wall மிதக்கும் உணவகம், லங்காவி, Kilim Karst Geoforest Park என்ற இடத்தின் கிளிம் ஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ளது.

இந்த மிதக்கும் உணவகமானது, 2003 ஆம் ஆண்டு ரஹ்மாட் என்பவரால் தொடங்கப்பட்டு, இன்று வரையில் அதிக அளவிலான வரவேற்பைப் பெற்று வர்த்தகத்தில் நிமிர்ந்து நிற்கிறது. கிளிம் ஆற்றங்கரையில் இருக்கும் இந்த Hole In The Wall உணவகம், திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ஒவ்வொரு நாளும் காலை 8 மணி தொடங்கி இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

இந்த ஆற்றில் மிதக்கும் உணவகம் தொடங்கப்படுவதற்கு முன்பு, ரஹ்மாட், தாம் வைத்திருந்த பண்ணையில் இருந்து, மீன் வளர்ப்பு மற்றும் மீன் ஏற்றுமதி துறையில் ஈடுப்பட்டிருந்தார். கோடை காலத்தின் போது, தனது பண்ணை குளிர்ச்சியாக இருப்பதை உறுதிசெய்வதற்காக, மேற்கூரையை அமைக்க, அவர் தாய்லாந்திலிருந்து நெய்யப்பட்ட ரம்பியா பாய்களை வாங்கி அதனை அமைத்தார்.

பின்னர், அவர் தனது விருந்தினர்களை உணவருந்தவும், இங்கே தங்கச்செய்தும் தனது செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தினார். ‘ஜியோபார்க்’ படகு சுற்றுப்பயணங்கள் மற்றும் பிற செயல்பாடுகளும், இந்த Hole In The Wall மூலம், அதன் உரிமையாளரால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.

கிளிம் துறைமுகத்திலிருந்து, Hole In The Wall மிதக்கும் உணவகத்திற்குச் செல்லும், இந்த 7 நிமிட படகு பயணத்தின் போது, ஆற்றின் இருபுறமும் உள்ள சதுப்பு நிலங்களின் கண் கவரும் காட்சியை இரசித்துக்கொண்டே மிதந்துச் செல்லலாம்.

‘ஜியோபார்க்கின்’ முறைப்படுத்தப்பட்ட படகு சுற்றுப்பயணங்கள், மதிய உணவிற்காக இந்த உணவகத்தில் சில மணி நேரம் நிறுத்தப்படுகின்றன. அதனால், ‘ஜியோபார்க் டூர் பேக்கேஜின்’ ஒரு பகுதியாக, சுற்றுப்பயணிகளுடன் வலம் வரும் படகுகள் மதிய உணவிற்காக இங்கு சங்கமாகுகின்றன. இதன் காரணமாக, மதிய நேரத்தில் இந்த மிதக்கும் உணவகம் மிக பரபரப்பாக செயல்படுவதைக் காண முடியும்.

மலேசிய மக்கள் அனைவரும், இந்த இடத்தை அவசியம் சுற்றிப்பார்க்குமாறு அழைக்கப்படுவதற்குக் பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முதன்மை காரணமாகத் திகழ்வது அதன் பசுமையன சுற்றுச்சூழல் தான். இதமான காற்று, பச்சை பசேல் என்று கண்களைக் குளிரவைக்கும் சிறு மலைகள், கரையோரம் வளர்ந்துள்ள உயரமான சதுப்பு நிலக் காடுகள், செவிக்கினிய அலையோசை ஆகிய கூறுகள் அந்த இடத்திற்கு வரும் சுற்றுப்பயணிகளை எளிதில் கவர்கின்றன என்பது வெள்ளிடை மலையாகும்.

இந்த பயணத்தில், Hole In The Wall மிதக்கும் உணவகத்தின் ஓர் ஓரமாக படகு நின்றப்பின்னர், அக்கடையில் உள்ள ஒரு பணியாளர், அங்கு வருகை தந்திருக்கும் சுற்றுல்லாப்பயணிகளை வரவேற்று, உணவகத்தின் அருகே உள்ள மீன்கள் பராமரிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வர்.  சுமார் 40 க்கும் மேற்பட்ட, ஆள் பலத்தினால் உருவாக்கப்பட்ட கூண்டுகளிலும் வலைகளிலும் பல தரப்பட்ட  மற்றும் அரிய வகை மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அதிலும், இந்த இடத்தின் நட்சத்திரமாகவும் செல்லப் பிராணியாகவும் திகழ்ந்து, மக்களை ஈர்ப்பது பெரிய திருக்கை மீன்கள் தான்.

அந்த மீன் பராமரிப்பு இடத்தில் உள்ள பணியாளர்கள், Groupers, Bat Fish, King Crabs, Snappers, Electric Eel எனப்படும் Archer Fish (spitting fishes)  மற்றும் lobsters போன்ற கடல் வாழ் உயிரினங்கள் குறித்து, அவ்விடத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பிறகு, அந்த மீன்கள் வளர்க்கும் இடத்தின் நட்சத்திரமாக விளங்கும், திருக்கையை பார்ப்பதற்கு, அந்த சுற்றுப்பணய வழிகாட்டி அழைத்துச் செல்கிறார். சுற்றுப்பயணிகள் அத்திருக்கையைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, அந்த வழிக்காட்டி ஒரு சிறிய மீனை வெட்டி அதன் கூண்டிற்குள் போட்டு அதனை நீரின் மேல் வரும்படிச் செய்வர். அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கு ஊற்சாகம் ஊட்டும் வகையில், திருக்கையின் வாயில் அவர்களே சிறிய மீன் துண்டுகளைப் போடுவதற்கு ஊக்கிவிக்கப்படுகின்றனர்.

Hole In The Wall மிதக்கும் உணவகத்தைச் சுற்றி வலம் வரும்போது, அங்குள்ள சிறிய கூண்டுகளில் கடற்குதிரைகள் இருப்பதையும் காணலாம். உலகில் கடற்குதிரைகளின் இனமானது, ஓர் அழிவை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கும் வேளையில், இவ்விடத்திலும் மிக குறைந்த எண்ணிக்கையிலான கடற்குதிரைகளே பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, ஆற்றில் உள்ள மற்றொரு கூண்டில், puffer வகை மீன்களும் வளர்க்கப்படுகின்றன். மேலும் மற்றொரு வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஆற்றில் மூழ்கிய கூண்டுகளில் ஒன்றில், 50 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட பெரிய குரூப்பர் வகை மீன்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன.

இந்த மிதக்கும் உணவகத்தின் உரிமையாளரான ரஹ்மாட், அவ்விடத்திற்கு வருகைப் புரிந்திருக்கும் பயணிகளைத், மீன் வளர்க்கப்படும் தொட்டிகளிலிருந்தும் கூண்டுகளிலிருந்தும், மீன் பிடிக்க அனுமதிப்பதோடு, பின்னர் அவர்களுக்காக அதனை சமைத்தும் தருகிறார்.

Hole In The Wall உணவகமும் அதன் அருகே அமைந்துள்ள மீன் வளர்ப்பு இடமும் சிறந்த அற்புதமான, ருசியான உள்ளூர் கடல் உணவுகளை வழங்குகின்றன. நண்டுகள், lobsters, கலி நண்டுகள், groupers, abalone மற்றும் பல வகை நீர் வாழ் உயிரினங்களிலிருந்து பல தரப்பட்ட உணவுகளைச் சமைத்து இவ்வுணவகத்தின் உரிமையாளர் மக்களுக்காக சேவையாற்றி வருகிறார். இம்மிதக்கும் உணவகம் மதிய உணவிற்காகவும் இரவு உணவிற்காகவும் திறக்கப்பட்டிருக்கிறது. சுமார் 15 மேசைகள் இந்த உணவகத்தில் இருப்பதனால், பெரிய குழுக்களைக் கொண்ட பயணிகளின் வருகை ஒரு பிரச்னையாக இருக்காது.

அங்கே அமர்ந்து உணவுகளை உட்கொண்டிருக்கு வேளையில், வெளியே காணப்படும் எழில் மிகுந்த சுற்றச்சூழலுக்கு ஏற்ப, ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும் பாய்மரப் படகுகளும் அந்த அழகிய காட்சியினை மென்மேலும் மெருகூட்டுவதைக் கண்டு ரசிக்கலாம்.

உணவகத்தின் பின்புறத்திலுள்ள, தொங்கும் நடைப்பாலத்திலிருந்து, சதுப்புநிலங்களையும் விலங்குகளையும் மற்றும் ஆற்றில் துள்ளி விளையாடும் நீர் வாழ் உயிரினங்களையும் மிக அருகில் இருந்து பார்க்கலாம்.

லங்காவி தீவில் முதல் முதலாக நிறுவப்பட்ட இந்த Hole In The Wall மிதக்கும் உணவகமானது, இன்று டிக் டாக், படவரி, முகநூல், கீச்சகம் போன்ற பல சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. நாட்டின் முக்கியச் சுற்றுள்ளாத்தளங்களில் ஒன்றாக விழங்கும் இந்த மிதக்கவும் உணவகம், உலக ரீதியில் புகழ்பெற்று வருகிறது.

WATCH OUR LATEST NEWS