ஊது மீனை உண்ண முடியுமா?

சமீபத்தில், ஜோகூரைச் சேர்ந்த இரு முதியவர்கள், ஊது மீனை சாப்பிட வேண்டும் என்ற ஆசையில், ஓன்லைனில் விற்பனை செய்யப்பட்டதை வாங்கியுள்ளனர். பிறகு அதை ருசிபார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமைத்த உண்ட மறுகனமே, அதன் விஷம் உடலில் ஏறி அந்த மூதாட்டி அப்பொழுதே உயிரிழந்த வேளையில், முதியவர் ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அந்த இரு முதியவர்களின் மரணம் மலேசியாவில் ஓர் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

ஊது மீன், விஷத்தன்மை கொண்ட காரணத்தால் அது காலங்காலமாக மலேசியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. அதனை விற்பனை செய்வதும், வாங்குவதும் நாட்டின் சட்டத்திற்குப் புறம்பாக இருக்கும் வேளையில், அதையும் மீறி யாரேனும் இந்த செயலில் ஈடுப்பட்டால், அரசாங்கம் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்.

இந்த விவகாரத்திற்குப் பிறகு, இப்படி அதிக விஷத் தன்மையைக் கொண்டிருக்கும் ஊது மீனை உண்ண முடியுமா? என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது.

மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ள இந்த ஊது மீனை, ஜப்பான், சீனா மற்றும் கொரியா உட்பட பல நாட்டு மக்கள் உண்கின்றனர் என்பதை நம்பமுடியாவிட்டாலும், அது தான் உண்மை.

உலகம் முழுவது உள்ள 350 க்கும் மேற்பட்ட பஃபர் மீன் எனப்படும் ஊது மீன் வகைகள் ‘tetrodotoxin’ என்ற விஷ வகையை அதிகம் கொண்டுள்ளதோடு, அதன் விஷம் 1,000 மடங்கு வலிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சரியான முறையைப் பயன்படுத்தி சமைக்கத் தவறினால், இந்து ஊது மீனில் உள்ள அந்தக் கொடிய விஷமானது உண்பவரின் உயிரைப் பறித்துவிடும்.

ஜப்பானில், 22 வகையான ஊதுமீன்கள் சமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஊது மீனில், அதிக அளவில் புரதச் சத்து இருக்கும் அதே வேளையில், கலோரி குறைந்த அளவில் உள்ளது. மேலும், தாது, ஊட்டச்சத்து போன்ற சத்துக்களும் அதில் இருப்பதாக ஜப்பானிய மக்கள் நம்புகின்றனர். இப்படி நல்ல சத்துக்களைக் கொண்டுள்ள ஊது மீனை சரியான முறையில் சமைத்து உண்டால், அது உடலுக்கு நலமே தவிர, அவற்றை ஏனோ தானோ என்று முறையான திறன் இல்லாமல் சமைத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது அவர்களின் கருத்தாகும்.

ஊது மீனால், எந்த நபருக்கும் ஆபத்து நேரிட கூடாது என்பதனை கருத்தில் கொண்டு ஜப்பான் அரசாங்கம், சமையல்காரர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்குகிறது. எனவே, சமைப்பதற்கு முன்னதாக, ஊது மீனில் உள்ள விஷத்தன்மை வாய்ந்த பகுதியை அகற்றி, பலமுறை சுத்தமான நீரால் கழுவி, அதன் ரத்தம் போன்றவற்றை வெளியேற்றி சுத்தம் செய்யப்படுகிறது. ஊது மீனின் பெரும்பாலன பகுதிகள் விஷமுடையவை என்பதால், அதன் ஒரு சிறுப் பகுதி மட்டுமே சமைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் நிபுணத்துவம் வாய்ந்த செயல்முறையினால், ஊது மீன்கள் உண்பதற்குப் பாதுகாப்பானவை என்று ஜப்பான் கருதுகிறது.

ஆனால், மலேசியாவைப் பெருத்தவரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது பாதுகாப்பற்ற இந்த ஊது மீனை எக்காரணத்திற்கும் மக்கள் விற்பனை செய்யவோ, சமைத்து சாப்பிடவோ கூடாது என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ள வேளையில், அந்த இரு முதியவர்களின் மரணம் மக்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. எனவே இவ்வாரான அபாய காரியங்களில் ஈடுப்படுவதை மக்கள் முற்றாக தவிர்ப்பது சாலச்சிறந்தது.

WATCH OUR LATEST NEWS