2 வயதிலேயே சமஸ்தானப்பதியாக பிரகடனம்

நெகிரி செம்பிலான் மாநில அரச பரிபாலனத்திற்கு ​நீண்ட நெடிய வரலாறு உண்டு. இதர மாநிலங்களின் அரச பரிபாலனத்துடன் ஒப்பிடுகையில் நெகிரி செம்பிலான் மாநில அரச பரிபாலனம், தனித்துவமான அடையாளத்தை கொண்டது. 9 மாநிலங்களில் மலாய் ஆட்சியாளர்கள் தத்தம் மாநிலங்களை ஆட்சி செய்து வருகின்றறனர். இதில் எட்டு மாநிலங்களின் ஆட்சியாளர்களை சுல்தான் என்று அழைக்கப்படுகிறது. நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளரை சுல்தான் என்று அழைக்கப்படுவதில்லை. மாறாக, யாங் டி – பெர்துவான் பெசார் நெகிரி செம்பிலான் அல்லது நெகிரி செம்பிலான் சமஸ்தானப்பதி என்று அழைக்கப்படுகிறார்.

மற்ற மாநிலங்களைப் போல தந்தை, புதல்வர் என தந்தைக்கு பிறகு மகன் மாநில ஆட்சியாளராக பொறுப்பு ஏற்கும் நிலை நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இல்லை. மாறாக, Adat Perpatih வழக்கத்தைக் கொண்டதாகும். மாநில சமஸ்தானப்பதியை 4 உண்டாங் லுவாக் என்பவர்கள் ​தேர்வு செய்கின்றனர். உண்டாங் ரெம்பாவ், உண்டாங் சுங்கை ஊஜோங், உண்டாங் ஜொகூல், உண்டாங் ஜெலபு ஆகியோரால் சமஸ்தானப்பதியை தேர்வு செய்கிறார்கள்.

மாநில சமஸ்தானப் பீடத்தை அலங்கரிப்பவர்களுக்காக பல்வேறு நிபந்தனைகளை உண்டாங் லுவாக் நிர்ணயித்துள்ளார்கள். அதனை பூர்த்தி செய்​கின்ற மாநில அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவர், மாநில சமஸ்தானப்பதியாக தேர்வு செய்யப்படுகிறார்.

​இப்படி ​கீர்த்தி வாய்ந்த நெகிரி செம்பிலான் சமஸ்தானம் பற்றி, புகழ்ந்துரைப்பதற்கு தற்போது அப்படி என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது? ஆம், நெகிரி செம்பிலான் சமஸ்தானம் நிறுவப்பட்டு, இவ்வருடத்துடன் 250 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. இதனை பெருவிழாவாக கொண்டாடும் வகையில் வரும் டிசம்பர் மாதம் வரையில் பலதரப்பட்ட கண்காட்சிக்கு ஏற்பாடு​ செய்யப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் எட்டாவது சமஸ்தானப்பதியான துவாங்கு அப்துல் ரஹ்மான் துவாங்கு முகமட், மாநில அரச வரலாற்றில் தனித்துவமான அடையாளத்தை தாங்கியவர் ஆவார். இவர்தான் நாட்டின் முதலாவது மாமன்னராக தேர்வு செய்யப்பட்டவர். தற்போது மலேசியப் பணநோட்டில் காணப்படும் உருவப்படம் துவாங்கு அப்துல் ரஹ்மானின் உடையதாகும். 1957 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றப் பின்னர் மலாய் ஆட்சியாளர்களால் தேர்வு செய்யப்பட்ட முதலாவது மாமன்னராக விளங்கிய துவாங்கு அப்துல் ரஹ்மானின் அரியணை விழா, 1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் பாலாய் ரோங் ஸ்ரீயில் முழு அரச சடங்குகளுடன் நடைபெற்றது.

நெகிரி செம்பிலான் சமஸ்தானப்பதி துவாங்கு முகமட் இப்னி யாம் துவான் அந்தா மற்றும் துங்கு புவான் சிக் தம்பதியருக்கு மகனாக 1895 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி கோலபிலாவில் இஸ்தானா லாமா ஸ்ரீ மெனாந்தியில் துவா​ங்கு அப்துல் ரஹ்மான் பிறந்தார். தமது இரண்டாவது வயதிலேயே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வருங்கால சமஸ்தானப்பதியாக பிரகடன்படுத்தப்பட்டவர். ஜெம்புல் மலாய்ப்பள்ளியில் தொடக்க கல்வியைப் பயின்ற துவா​ங்கு அப்துல் ரஹ்மான், 1907 இல் கோல கங்சார் மலாய் அரச கல்​லூரியில் சேர்க்கப்பட்டார்.

1927 ஆம் ஆண்டு சட்டக்கல்வியை பயில பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டார். உயர் கல்வி முடித்துவிட்டு தாயகம் திரும்பியப் பின்னர் பத்தாங் பாடாங் மாவட்ட அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் 1933 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி தமது தந்தையார் மறைவைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநிலத்தில் எட்டவாது ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.

நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர். நெகிரி செம்பிலான் சமஸ்தானப்பதியாக ஆட்சி செலுத்திய காலத்தில் கம்யூனிஸ்டுகளை முழு வீச்சில் எதிர்த்த மலாய் ஆட்சியாளர்களில் துவா​ங்கு அப்துல் ரஹ்மான் முதன்மையானவர்.

ஜப்பானியர்கள் வெளியேறியப்பின்னர் கம்யூனிஸ்டுகளை துடைத்தொழிக்க பிரிட்டிஷார்,1948 ஆம் ஆண்டு நாட்டில் அவசர காலத்தை அறிவித்தனர். கம்யூனிஸ்டுகளை முழு வீச்சில் துவாங்கு அப்துல் ரஸ்மான் எதிர்த்த காரணத்தினால் அவரை கொல்வதற்கு ரயிலில் வெடிகுண்டு வைப்பதற்கு கம்யூனிஸ்டுகள் திட்டமிட்டனர். 56 வயதான துவாங்கு அப்துல் ரஹ்மான், தமது துணைவியார் துவாங்கு குர்ஷியாவுடன் சிங்கப்பூரிலிருந்து சிரம்பானுக்கு ரயிலில் திரும்பிக்கொண்டு இருந்த போது வெடிகுண்டு சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட 564.12 என்ற பதிவு எண்ணைக் கொண்ட அந்த பிரத்தியேக ரயில் வண்டி, போர்ட்டிக்சன் இராணுவ அருங்காட்சியகத்தில் இன்னமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நெகிரி செம்பிலான் மாநில அரச பரிபாலனத்தின் இந்த 250 ஆண்டு கால வரலாற்றுக்கு மேலும் பெருமை சேர்க்க தற்போது பலதரப்பட்ட கண்காட்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

WATCH OUR LATEST NEWS