ஒரு காலாக்கட்டத்தில், ‘மலாயா’ என அழைக்கப்பட்ட மலேசியாவில் உள்ள இந்திய இனத்தவர்களின் வரலாற்றுக் கதைகளில் ரப்பர் மரம், பிரிக்க இயலாத அங்கமாக விளங்கியது. ஏனெனில் அத்தகைய ரப்பர் மரத்தோட்டங்களில்தான் தமிழர்கள் அநேகரின் உழைப்பு சங்கமமானது.
ஆனால், முதல் முதலில் ரப்பர் மரத்தின் பயன்பாட்டை உணர்ந்தவர்கள் தென் அமெரிக்கர்கள் தான். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற உலோகங்களைத் தேடி ஓட்டிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் ரப்பரின் பயனை அறித்து, அதனை பெரிய அளவில் கொண்டுச் செல்ல முயன்றனர்.
அந்த வகையில், ஹென்ரி விக்ஹெம் என்பவர் 70,000 ஹெவியா பிரேசிலியேன்சிஸ் தாவரம் என்ற ரப்பர் மரம் விதைகளை இங்கிலாந்தில் உள்ள கியூ கார்டன்ஸ்சில் பயிர் செய்தார். இதிலிருந்து தரமான விதைகள், 1876 ஆம் ஆண்டுகளில் சிலோனில் அமைந்துள்ள பொட்டனிக்கல் கார்டனுக்கு அனுப்பப்பட்டன.
பின்னர், சிலோனிலிருந்து 1878 ஆம் ஆண்டில், 22 ரப்பர் மரக் கன்றுகள் சிங்கப்பூருக்கும் பேராவிலுள்ள கோலகங்சார் மாவட்டத்திற்கும் அனுப்பப்பட்டன. 1877 ஆம் ஆண்டு 22 மரக் கன்றுகளில் 9 மரக்கன்றுகள் கோலாகங்சாரில் நடப்பட்டன. 1880 களில் கோலகங்சாரில் பயிரிடப்பட்ட ரப்பர் மரங்கள் செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்கிய வேளையில், அவற்றின் விதைகள் 1883 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டன.
மலாயாவிற்குக் கொண்டுவரப்பட்டு, கோலாகங்சாரில் பயிரிடப்பட்ட 9 ரப்பர் மரக் கன்றுகளில் ஒன்றே ஒன்று மட்டும்தான் எப்படியோ தப்பிப் பிழைத்தது. அந்த ஒரே கன்றுதான் பெரிய மரமாகியது. பிறகு அம்மரத்தின் விதைகளின் மூலமாகத்தான் மற்ற மரக் கன்றுகளும் உயிர்பெற்றன. பல்லாயிரம் மரங்கள் பிறந்தன. அப்படி உருவாகிய ரப்பர் மரங்களைக் கொண்டுதான் 1887 ஆம் ஆண்டில் மலாயாவில் முதல் ரப்பர் தோட்டம் நிறுவப்பட்டது. அதன் பிறகு 1889 ஆம் ஆண்டு, சிலாங்கூர் மாநிலத்தில் மிட்லண்ட்ஸ் தோட்டத்தில் முதல் ரப்பர் தோட்டம் உருவானது.
மலேசியாவின் தட்பவெப்பநிலை, சிறந்த மண் வளம் மற்றும் ஏராளமான நிலங்கள் என இவை அனைத்தும் ரப்பர் பெரிய அளவில் நடப்பட்டு, பொருளாதரத்திற்கும் பெரும் பங்காற்ற துணைப் புரிந்தன. 1890 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, ரப்பரின் தேவையில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டபோது, அதன் உற்பத்தி வியத்தகு முறையில் அதிகரித்து வந்தது. அதுமட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு மலேசியாவின் முதன்மை ஏற்றுமதியாக ரப்பர் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 2023 ஆம் ஆண்டை நாம் தொட்ட போதிலும், 1877 ஆம் ஆண்டில் நடப்பட்ட அந்த முதல் ரப்பர் மரத்தை ஒவ்வொரு குடிமக்களாலும் காணமுடிகிறது. 146 ஆண்டுகள் ஆகியும், இன்றளவும் கம்பீர தோற்றத்துடன் காட்சியளிக்கிறது அந்த ரப்பர் மரம். கோலாகங்சார், ஜாலான் துன் ரசாக்கின் சாலை ஓரத்தில் அமைந்துள்ள இந்த ரப்பர் மரம், சுற்றிலும் அழகிய வேலிகளால் பாதுகாக்கப்பட்டு வருவதோடு, அம்மரத்தின் முன் 24 மணி நேரமும் நாட்டின் ‘ஜாலோர் கெமிலாங்’ கொடி பறக்கவிடப்படுகிறது.
அந்த மரத்தைச் சுற்றியிருப்பது ஒரு வரலாற்று இடத்தின் பழைய நாட்களின் சுகமான நினைவுகளாகும். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வீழாமல், பெரிய மரமாக திகழ்கிறது என்றால் ஆச்சரியமாகதான் இருக்கிறது. அங்குள்ள தகவல் பதாகைகள் மற்றும் கல்வெட்டுகளில் எழுத்தப் பட்டிருக்கும் குறிப்புகளைப் படித்தாலே, அதன் வாழ்நாள் முழுவதும் நடந்த வரலாற்றை நிச்சயம் நினைவுக்கூற முடியும். பார்ப்பதற்கும் அறிந்துக்கொள்வதற்கும், இது உண்மையிலேயே சுவாரஸ்யமான இடமாக விளங்குகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த ரப்பர் மரத்தை நம்மால் பாதுகாக்க முடியும் என்பதற்கு விடை கிடையாது. எனவே, இன்றைய தலைமுறையினர் மட்டுமல்லாது ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த இடத்திற்குச் சென்று வர வேண்டும். ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு அம்மரம் இல்லாத நிலை ஏற்பட்டாலும், இதன் அருமை பெருமைகள் ஒவ்வொரு தலைமுறையினரையும் அவசியம் சென்றடைய வேண்டும்.