பினாங்கு என்று கூறினாலேயே மக்களின் நினைவுக்கு வருவது, பத்து ஃபெரிங்கியின் அழகிய மணல் கடற்கரை, ஜார்ஜ் டவுனில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியத் தளங்கள் மற்றும் நாவை ருசிப்பார்க்க வைக்கும் தெருவோர அங்காடி கடை உணவுகள் ஆகியவற்றைச் சொல்லாம்.
ஆனால்,குயின்ஸ்பே மாலுக்கு அருகே கடற்கரையோரம் உள்ள பூலாவ் ஜெராஜக் மற்றும் அதன் வரலாறு குறித்து எத்தனைப் பேருக்குத் தெரியும்?
பூலாவ் ஜெராஜக், பினாங்கு கடற்கரையில் வீற்றிருக்கும் ஒரு சிறிய தீவாகும். இதன் பரப்பளவு 362 ஹெக்டர் ஆகும். இத்தீவு வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.
முன்பொரு காலத்தில், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப் படுத்தும் இடமாக இந்தப் பூலாவ் ஜெரேஜாக் தீவு திகழ்ந்தது.
அன்றைய மக்கள், தொடுதலின் மூலம் தொழுநோய் பரவுகிறது என்று நம்பியதால், அந்நோய் கண்டவர்கள் மற்ற மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர். 1940 ஆம் ஆண்டு வரை இத்தொழுநோய்க்கு மருந்து ஏதும் கண்டுப்பிடிக்காத நிலையில், 1926 ஆம் ஆண்டில், தொழுநோயாளிகள் சட்டம் நிறுவப்பட்டது. யாருக்காவது தொழுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அது தொடர்பாக உடனே அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது.
தொழுநோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்காக மலேசியாவில் இரண்டு இடங்களில் பிரத்தியேக மையங்கள் அன்றைய நாளில் நிறுவப்பட்டன. அவற்றில் ஒன்று சிலாங்கூர், சுங்கை பூலோ தொழுநோயாளிகள் மையம், மற்றொரு இடம் பினாங்கு, பூலாவ் ஜெராஜக் தீவு ஆகும்.
1868 ஆம் ஆண்டில் பினாங்கில் உள்ள சீன வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு, இந்தத் தொழுநோயாளிகள் மையம் நிறுவப்பட்டது. 7,000க்கும் மேற்பட்ட தொழு நோயாளிகள் இங்குத் தனிமைப் படுத்தப்பட்டதாக சான்றுகள் உள்ளன.
நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு, இருமல் மூலம் பரவுகின்ற மற்றொரு தொற்று நோயான காசநோய் பினாங்கைத் தாக்கியது. எனவே, காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயாளிகளுடன் அதே தீவில் தனிமைப்படுத்தப்பட்டனர். 1948 ஆம் ஆண்டில், அத்தீவின் தெற்குப் பகுதியில் ஒரு காசநோய் சுகாதார மையம் கட்டப்பட்டது.
அதோடு, இந்த ஜெராஜக் தீவானது போர்க் கைதிகளை அடைத்து வைக்கும் ஒரு தடுப்பு மையமாகவும் அந்நாளில் விளங்கியது. 1945 ஆம் ஆண்டு, மலாயாவில் ஜப்பானியர்கள் சரணடைந்தப் பிறகு, ஆசியப் போர்க் கைதிகளைச் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதற்கு முன், அவர்களைத் தற்காலிமாக அடைத்து வைப்பதற்கு இந்த ஜெராஜக் தீவு பயன்படுத்தப்பட்டது. 1948 ஆம் ஆண்டு முதல் அரசியல் கைதிகளைத் தடுத்து வைப்பதற்கு ஜெராஜக் தீவை, சிறைச்சாலையாக ஆங்கிலேயர்கள் மாற்றினர்.
1969 ஆம் ஆண்டில் ஜெரேஜாக் தீவு, மலேசிய சிறைச்சாலை இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. கடுங் குற்றங்களுக்காக மாநிலம் விட்டு மாநிலம் மாற்றப்படும் குற்றவாளிகளை அடைத்து வைக்கும் பலத்தப் பாதுகாப்பு மிகுந்த ஒரு தடுப்பு மையமாக பயன்படுத்தப்பட்டது.
குறிப்பாக,சட்ட ரீதியாக போதுமான ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்ட இயலாத கடுங் குற்றவாளிகள்,சிறப்பு அனுமதியின் பேரில் அவர்களைக் குறிப்பிட்ட காலத்திற்குத் தடுத்து வைக்கும் மையமாக ஜெரேஜாக் தீவு பயன்படுத்தப்பட்டது.
தற்போது சிம்பாங் ரெங்காம், தடுப்புக் கைதிகள் முகாமைப்போல,அன்றைய நாளில் பூலாவ் ஜெராஜக் பயன்படுத்தப்பட்டது.
1969 ஆம் ஆண்டு, மே 13 கலவரத்திற்குப் பிறகு அமலில் இருந்த 1948ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுப்புக் கைதிகள் அத்தீவில் அடைத்து வைக்கப்பட்டனர்.
1993 ஆம் ஆண்டு அந்தத் தீவுச் சிறைச்சாலை மூடப்படும் வரையில், கடுங் குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்குரிய ஒரு மறுவாழ்வு மையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த பூலாவ் ஜெராஜக், அதன் பின்னர் பினாங்கின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வழிவிடும் வகையில் அந்தச் சிறைச்சாலை அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. அதில் இருந்த கைதிகள் ஜோகூரில் உள்ள மூவார் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டனர்.

ஜெராஜக் தீவின் மற்றொரு வரலாறு, முதலாம் உலகப் போரில் இரண்டு ரஷ்ய வீரர்கள் அங்கே புதைக்கப்பட்டனர். அந்த இரண்டு வீரர்களும் ரஷ்ய கப்பலான Zemchug pearl’s இல் பயணித்தவர்கள் ஆவர். பினாங்குத் தீவில் உள்ள பிரிட்டிஷ்காரர்களுக்கு இடையூறு விளைவிப்பதற்காக வேவுப் பணியில் ஈடுபட்டிருந்த Emden என்ற ஜெர்மன் கப்பலால் ரஷ்யாவின் zemchug pearl’s தாக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டது.
Zemchug pearl’s இல் பயணித்த 250 ரஷ்ய வீரர்களில், 85 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 26 பேரின் உடல்கள் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டனர். அவர்களில் 24 பேர், பினாங்கில் மேற்கு சாலையில் உள்ள பழைய கத்தோலிக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இரண்டு வீரர்களின் உடல்கள் மட்டும் ஜெராஜக் தீவில் அடக்கம் செய்யப்பட்டன. நீண்டக்காலமாக கைவிடப்பட்ட நிலையில் ஜெராஜக் தீவில் இரண்டு ரஷ்ய வீரர்களின் கல்லறைகள் 2006 ஆம் ஆண்டு ரஷ்ய தூதரகம் மேற்கொண்ட முயற்சியினால் சுத்தம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

எனினும்,அந்தக் கல்லறைகளில் வைக்கப்பட்டிருந்த நங்கூரமும் சங்கிலியும் பொறுப்பற்ற நபர்களால் களவாடப்பட்டுள்ளன.
இன்று, ஜெராஜக் தீவு மக்களின் நல்வாழ்வுக்குரிய ஒரு மையப் பகுதியாக, ஆடம்பர வீடுகள், தங்கும் விடுதிகள் மற்றும் ‘தீம் பார்க்’போன்ற நீர் விளையாட்டுப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகளைப் பெற்று ஓர் உல்லாசப்புரியாக காட்சியளிக்கிறது.

ஆனால், மலாயாவின் பிரதான நுழைவாயிலாக ஒரு காலத்தில் விளங்கிய ஜெராஜக் தீவு, இன்று மேம்பாட்டு அலையில் எத்தகைய புதியத் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், தொழுநோயாளிகள் மையம், கடும் குற்றவாளிகளின் சிறைச் சாலையாக மாறிய வரலாறு தான் அந்தத் தீவை இன்றும் தாங்கிப் பிடிக்கின்றது.
– மாலதி சண்முகம்