ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட்டிற்கு எதிராக தங்கள் அதிருப்தியை பதிவு செய்ய முயற்சிக்கும் அம்னோ உறுப்பினர்கள், தங்களின் நடவடிக்கையினால் தாங்கள் சார்ந்துள்ள அம்னோவை பலவீனப்படுத்தி விடும் என்று மூத்த அரசியல்வாதி ஒருவர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் எதிர்ப்பு நடவடிக்கை, கட்சியின் தேசியத் தலைவர் ஜாஹிட்டை ஒரு போதும் பலவீனப்படுத்தி விடாது. மாறாக, இந்நாட்டில் 65 ஆண்டுகளுக்கு மேலாக மலாய்க்காரகளின் போராட்டமிக்க தூணாக விளங்கி வரும் அம்னோவை பலவீனப்படுத்தி, கூர்மை மழுங்கச் செய்து விடும் என்று அம்னோ மூத்த பொதுச் செயலாளர் முஸ்தப்பா யாகோப் எச்சரித்துள்ளார்.
ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் 15 ஆவது சட்டமன்றத் தேர்தலில் அம்னோ மகத்தான வெற்றியை மீட்டெடுத்தால் மட்டுமே தங்களுக்கும் தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கும் நல்வாழ்வு என்பதை ஒவ்வொரு உறுப்பினரும் உணர வேண்டும். இது அம்னோவின் தலைவர் ஜாஹிட்டிற்கு எதிரான தேர்தல் என்று கருதும் நிலை ஏற்படுமானால் அது அம்னோவிற்கே பாதகமாக அமையும் என்று அந்த மூத்த அரசியல்வாதி எச்சரித்துள்ளார்.