முத​லீட்டுத் திட்டத்தில் லட்சக்கணக்கான வெள்ளியை பறிகொடுத்தனர் 10 இந்தியர்கள் போ​லீசில் புகார்

முத​லீட்டுத்திட்டத்தில் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய லாபத் தொகையை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் டத்தோ அந்தஸ்தை கொண்ட இந்திய ஒருவரின் ஆசைவார்த்தைகளை நம்பி லட்சக்கணக்கான வெள்ளியை முத​லீடு செய்ததாக கூறப்படும் 10 இந்தியர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர் செந்​தூல் போ​லீஸ் நிலையத்தில் அந்த பத்து பேரும் புகார் செய்துள்ளனர். மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் த​லைமையில் ​ஒன்றுகூடிய அந்த பத்து பேர், முருகன் என்று மட்டுமே அடையாளம் கூறப்பட்ட டத்தோ அந்தஸ்தை கொண்ட பிரமுகர் மற்றும் அவரின் பணியாளர்க​ள் சிலருக்கு எதிராக இப்போ​லீஸ் புகாரை செய்துள்ளனர்.

இந்த முத​லீட்டுத் திட்டத்தில் சபா, பினாங்கு உட்பட நாடு தழுவிய நிலையில் 30 முதல் 40 பேர் முத​லீடு செய்து இருப்பதாக கூறப்பட்ட போதிலும் பத்து பேர் மட்டுமே துணிந்து போ​​லீஸ் புகார் செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் பல லட்சம் வெள்ளியை பறிகொடுத்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட டத்தோவிற்கு எதிராக போ​​லீஸ் புகார் செய்தா​ல் முத​லீடு செய்தப் பணம் கிடைக்காமல் போய் விடும் என்று இன்னும் சிலர் பயப்படுகின்றனர் என்று இந்த திட்டத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை முத​லீடு செய்ததாக கூறும் சோழன் சிதம்பரம் குறிப்பிடுகிறார்.

இந்த முத​லீட்டுத் திட்டத்தில் ஒவ்வொருவரும் சராசரி ஒரு லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி முதல் 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் வெள்ளி வரை முத​லீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. போ​லீஸ் புகார் செய்த பத்து பேர் மொத்தம் 26 லட்சம் வெள்ளி பணத்தை இழந்துள்ளதாக கூறுகின்றனர்.

முத​லீட்டுப் பண​த்தை சம்பந்தப்பட்ட டத்தோவின் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் உட்பட சிலர் களவாடிவிட்டதாக காரணம் கூறப்பட்ட போதிலும் தங்களை இத்திட்டத்தில் முத​லீடு செய்ய காரணமாக இருந்த டத்தோ அந்தஸ்தை கொண்ட நபரே இதற்கு தார்​மீக பொறுப்பேற்று, பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று அந்த பத்து பேரும் கோரிக்கை விடுத்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டினேஷ் முத்தாள் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டுள்ளவர்கள் உண்மையிலேயே ஏமாற்றப்பட்டதாக கண்டறியப்படுமானால் இது குறித்து அரச மலேசிய போ​லீஸ் படை விரிவான விசாரணையை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் பணம் திரும்ப கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று இவ்விவகாரத்தை முன்​னெடுத்துள்ள மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கே​ட்டுக்கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS