உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சுரைடா மேல்முறையீடு

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக பீகேஆர் சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றப் பின்னர் அக்கட்சியை விட்டு விலகி, பெர்சத்து கட்சிக்கு தாவியதற்காக பிகேஆர் கட்சிக்கு ஒரு கோடி வெள்ளி இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள அம்பாங் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டத்தோ சுரைடா கமாருடின், அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அக்தார் தாஹிர் கடந்த ஜுன் 23 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் அதிருப்தியுற்ற தோட்டம் மற்றும் மூலத் தொழில் துறை முன்னாள் அமைச்சருமான சுரைடா, அத்தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று தெதுவான் ஸாரிஃப் நிசாமுடின் வழக்கறிஞர் நிறுவனம் மூலம் தமது மேல்முறையீட்டை புத்ராஜெயாவில் உள்ள அப்பீல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

பிகேஅர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான சுரைடா, பிகேஆர் கட்சி சார்பாக அம்பாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிடுவதற்கு முன்பு கட்சியின் தலைமையகம் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு தம்மை கேட்டுக்கொண்ட போது அதன் நிபந்தனைகள் குறித்து தம்மிடம் விளக்கப்படவில்லை என்று தமது தற்காப்பு வாதத்தில் தெரிவித்து இருந்தார்.
எனினும் ஒப்பந்தத்தை படிக்காதது சுரைடாவின் குற்றமே தவிர பிகேஆர் குற்றம் அல்ல என்று கூறி அவரின் எதிர்வாதத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

WATCH OUR LATEST NEWS