இளைஞர்கள், குறிப்பாக இளம் வாக்காளர்கள் அரசியலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதன் வழி, நாட்டின் தேசியக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதில் அவர்களால் பங்கு வகிக்க முடியும் என தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர்தியோ நீ சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இளைஞர்களில் சிலர் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம், ஏனெனில், அவர்கள் சில அரசியல்வாதிகளின் செயல்பாடுகளால் ஏமாற்றமடைந்து, அரசியல் வேண்டாம் என்று கூட நினைக்கிறார்கள். ஆனால், நாட்டில் மாற்றத்தை கொண்டு வர, அரசியல் மிக முக்கியமான தளமாக அமைகிறது.
“அரசியல் பணிகளில் இளைஞர்களை தொடர்ந்து அதிகமாக ஈடுபடுத்துவது முக்கியம். ஏனென்றால், ஒர் அரசாங்கம் எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பதை புரிந்துக் கொள்வது மட்டுமல்லாமல், ஒவ்வொரு கொள்கையும் நம் வாழ்வில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்,” என்று “தியோ உடன் சிட் சாட்” கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“அடிப்படையில் அரசியல், அரசியல்வாதிகளை உருவாக்கும் என்பதை இளையோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் மாநில சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் கொள்கைகளை அரசியல்வாதிகள் தீர்மானிப்பார்கள். ஆகவே, அரசியலில் ஈடுபட இளைஞர்களை தாம் திடமாக ஊக்குவிப்பதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.