பினாங்கு, பகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் இம்முறை நம்பிக்கை மிகுந்த வேட்பாளரை DAP நிறுத்தியுள்ளது. புதிய முகமான 45 வயதுடைய குமரன் கிருஷ்ணன் என்ற கால்வின் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடுகிறார். அவர் பகான் டாலாம் தொகுதியில் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினராக பொறுப்பேற்று திறம்பட சேவையாற்றி, மக்களின் அபரிமித நம்பிக்கையை பெற்றவரான குமரன் கிருஷ்ணன், பட்டர்வொர்த் இந்திய சமூக நல அமைப்பின் தலைவராகவும் பொறுப்பேற்று பலதரப்பட்ட சேவைகளை வழங்கி, பினாங்கு மக்களுக்கு செல்லப் பிள்ளையாகவும் விளங்குகிறார்.
வேட்புமனுத்தாக்கல் நடைபெற்ற தினத்திலிருந்து தமது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருக்கும் குமரன் கிருஷ்ணன், பகான் டாலாம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு குழுவாக பயணம் செய்து வாக்காளர்களை சந்தித்து வருகிறார். தாம் சந்திக்கும் மக்களை வாக்களிக்கும்படி மட்டும் குமரன் கிருஷ்ணன், கேட்டுக்கொள்ளவில்லை. மாறாக, ஒவ்வொருவரின் பிரச்னையும் நேரடியாக கேட்டறிந்து, அவர்களுக்கு உதவுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவது பெரும் கவன ஈர்ப்பாக மாறி வருகிறது.
தொகுதி மக்கள் அளித்து வரும் ஆதரவு, குமரன் கிருஷ்ணனுக்கு பெரும் உற்சாகத்தை தூண்டும் சக்தியாக மாறியிருக்கிறது. வரும் 12 ஆம் தேதி மக்கள் பெரும் திரளாக வாக்களிப்பில் கலந்து கொண்டு தம்மை வெற்றி பெறச்செய்யுமாறு குமரன் கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.