டயர் வெடித்ததில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலைத் தடுப்பில் மோதி, மேலும் இரு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும்,மகனும் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 276.9 ஆவது கிலோமீட்டரில் நீலாய்க்கு அருகில் நிகழ்ந்தது. பெரோடுவா கான்சில் காரில் பயணித்த 30 வயது நபர், சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் அவரின் 2 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். தவிர உயிரிழந்த நபரின் 27 வயது மனைவி மற்றும் அவர்களின் ஐந்து வயதுடைய மேலும் ஒரு பிள்ளை கடுமையான காயங்களுடன் சிரம்பான், துவான்கு ஜாஃபார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பெர்ன்தென்டென் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் விபத்துக்குள்ளான மேலும் இரு வாகனமோட்டிகள் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.