ஜோகூர் பாரு – பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத்தேர்தல்களின் சமூக ஊடக பிரச்சாரத்தில் இனம், மதம் மற்றும் அரச குடும்பம் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரம் குறித்து இதுவரையில் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு எவ்வித புகாரையும் பெறவில்லை.
தேர்தல் பிரச்சாரம் முடிவுறும் வரை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், அரசு மலேசிய போலீஸ் படை ஆகியவை இது தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்புப் பணியை நடத்தும் என தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
ஆயினும், கடந்த மாதம் நடைபெற்ற ஆறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் இந்த இடைத் தேர்தலில் சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள் செய்வது போதிய வரவேற்பைக் கொடுக்கவில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி மக்கள் வாக்களிக்க வெளியேறுவதை ஊக்குவிப்பதே நம்பிக்கை கூட்டணிக்கும், தேசிய முன்னணிக்கும் ஒரு சவாலாக அமையும் என்று அவர் மேலும் கூறினார்.
“கடந்த இடைத்தேர்தலில் 3ஆர் தொடர்பாக 26 புகார்கள் பெறப்பட்டன, அவ்வறிக்கைகள் நடவடிக்கைக்காக அரசு மலேசிய போலீஸ் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன,” என்றார்.
முன்னதாக, ஜோகூர் பாரு, சுங்கை தெமோனில் உள்ள பூர்வக்குடி கிராமத்தில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவியைப் பொருத்தும் தளத்தைப் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.