துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடிக்கு எதிரான இலஞ்ச
ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படாமல், வழக்கில்
இருந்து விடுதலை செய்யப்பட்டது குறித்து பிராசிகியுஷன் விளக்கமளிக்கப்பட
வேண்டும் என்று மனித உரிமை போராட்டவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
47 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கில் எந்த நிபந்தனையின்
அடிப்படையில் ஸாஹிட் விடுதலை செய்யப்பட்டார் என்பதற்கான காரணத்தை அரசு
தரப்பு வழக்கறிஞர் குழுவினர் விளக்கமளிக்க வேண்டும் என்று பெர்சேவின் முன்னாள் தலைவர்
மரியா சின் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸாஹிட்டுக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கில் அடிப்படை முகாதிரங்கள் இருப்பதாக உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பிராசிகியூஷன் தரப்பு கடும் உழைப்பை வழங்கி ஆதாரங்களை
வலுப்படுத்திய நிலையில், இன்று அவர் விடுவிக்கப்பட்டது குறித்து மனித உரிமை
போராட்டவாதியான அம்பிகா சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.