ஒட்டாவா: ஹர்திப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் இந்தியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் கனடா, வரும் 2024 ஆம் ஆண்டு மட்டும் பொருளாதார ரீதியாக பல நூறு கோடிகள் இழப்பை சந்திக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
கனடாவில் வசித்து வந்த கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த கொலைகளுக்கு பின்னணியில் இந்திய ஏஜெண்ட்களின் பங்கு இருப்பதாக கனடா குற்றம் சாட்டுகிறது. இதனை இந்தியா முழுவதுமாக மறுத்தது. இந்தியாவுக்கு பங்கு இருக்கலாம் என்று கனடா சொல்கிறதே தவிர, அதற்கான ஆதாரங்களை இந்தியாவிடம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டதையடுத்து, இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது. அதேபோல், கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது.
இவ்வாறாக ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரத்தால் இந்தியா – கனடா இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா – கனடா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையாயான இந்த மோதல் போக்கால் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு உயர் படிப்புக்காக செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் 5 சதவீதமாவது குறையும் என்று இமேஜ்இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.