இங்குள்ள ஜாலான் காப்பார் வட்டாரத்தில், போலி எண் பட்டையைப் பயன்படுத்தி ஃபோர்ட் முஸ்தாங் வகைக் காரை செலுத்திய விவகாரம் சாலைப் போக்குவரத்துத் துறை ஜே.பி.ஜே யின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று காலை 11.40 மணி அளவில் அத்துறை நடத்திய சோதனையின்போது, அந்தக் காரை சந்தேகிக்கப்படும் வகையில் 36 வயது கார் வியாபாரி ஒருவர் செலுத்தியதாகவும் வேறு ஒரு வாகனத்தின் பதிவு எண் பட்டை பயன்படுத்தப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் கமருஞ்சமான் மேஹத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அந்த ஃபோட் முஸ்தாங் கார் இன்னும் சாலைப் போக்குவரத்துத் துறையிள் பதிவு செய்யப்படவில்லை எனவும் புதிய உரிமையாளர் பெயருக்கு இன்னும் மாற்றம் செய்யப்பட வில்லை என்பதும் தமது விசாரணையில் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
போலி ஆவணக் குற்றத்திற்காக ஒரு எச்சரிக்கைக் கடிதம் வெளியிடப்பட்டதோடு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 64 உட்பிரிவு 1இன் படி அந்தக் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அஹ்மத் கமருஞ்சமான் மேஹத் கூறினார்.